தமிழர்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் ஏமாறுவது!

-நஜீப் பின் கபூர்-

உள்ளே வந்தாலும் தள்ளி நின்று கொள் உபசரிப்பு!
தெற்கு சமயலுக்காக தமிழர் கருவேப்பிள்ளை சப்ளை!

தமிழர்களின் அரசியல் பற்றிப் பார்க்க முன்னர் தெற்க்கில் என்ன நடக்கின்றது என்பதனை சற்றுப் பார்ப்போம். தேர்தலுக்கு ஆப்பு வைத்து விட்டு இன்னும் சில காலத்துக்கு கதிரையில் இருக்க ஜனாதிபதி ரணில் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் அனைத்துத் தரப்பினரும் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

ஆளும் தரப்பு என்று பார்க்கின்ற போது மொட்டுக் கட்சி பிரதான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. அதே மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ஒரு தொகையினர் ரணில் விசுவாசியாக இருக்கின்றார்கள். இதனால் ஆளும் தரப்புக்குள் ரணில்-ராஜபக்ஸ தரப்பு என்று பிளவுகள். என்றாலும் நாடாளுமன்னத்தில் பிரேரனைகள் என்று வரும்போது இந்த இரு தரப்பினரும் ஐக்கியமாகி ஆளும் தரப்பை காப்பற்றி விடுகின்றனர். இதனால் இது ஒரு நாடகமே என்று நாம் தொடர்ந்தும் கூறுகின்றோம். அங்கு ஏதோ டீல்.

அவர்களின் அந்த இணக்கபாடுகளும் முரண்பாடுகளும் அப்படி இருக்க முதலில் பொதுத் தேர்தல்தான் நடக்க வேண்டும் என்ற பசிலின் கோரிக்கை இதுவரை வெற்றி பெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் என்ற எதிர்பார்ப்பு மேலாங்கி இருக்கின்றது. அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ப்பில் இன்றும் ஒருமித்த கருத்து இல்லை.

அப்படி இருந்தாலும் ரணில், தம்மிக்க, நாமல், என்று அங்கு ஒரு உச்சரிப்பு. இதில் ரணில் விசுவாசிகள் குறிப்பாக இன்று ரணிலால் பிழைத்துக் கொண்டிருக்கின்ற ஐதேக.காரர்களும் அரசில் பதவிகளால் அலங்கரிக்கப் பட்டிருப்பவர்களும் ரணிலுக்குத்தான் வாய்ப்புக் வேண்டும் என்று கேட்கின்றனர். மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ராஜபக்ஸ விசுவாசிகள் தம்மிக்க பெரேராவுக்கு அல்லது நாமலுக்குத்தான் வாய்ப்புக் வேண்டும் என நிற்கின்றார்கள்.

இந்த நிலையில் இருதரப்பினரும் தமது பிரச்சாரங்களைத் துவங்கி இருக்கின்றார்கள். ரணிலுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டுமானால் சஜித் அணியில் இருந்து குறைந்தது இரண்டு டசன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் தனது அணிக்கு கொண்டு வரவேண்டும் எனக் காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு ரணில் ஓகே என்றார். ஆனால் இதுவரை ஒருவர் கூட அவருடன் வந்து சேரவில்லை.

Mahinda On The Defence While Ranil Measures Up To The Winning Post - Colombo Telegraph

இன்று வருகின்றார்கள் நாளை வருகின்றார்கள் என காலம் கடத்திக் கொண்டு போகின்றார். எனவே இதனால் ஆளும் தரப்பில் ரணில் வேட்பாளர் என்பது குதிரைக் கொம்புதான். என்றாலும் பிரசன்ன ரணதுங்ஹ, மஹிந்தானந்த, காஞ்சன, சேமசிங்ஹ போன்றோர் அந்த முயறச்சியில் தொடர்ந்தும் இருக்கின்றார்கள். நமது இந்தப் கூட்டணிக்கு இன்னும் பலர் வந்து இணைந்து கொள்ள இருக்கின்றனராம். அறுபதுவரையிலான மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் சஜித் தரப்பில் இருபது சுதந்திரக் கட்சியில் ஒரு தொகை ரணிலுக்கு ஆதரவாம்.

கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என ரணிலின் நெருங்கிய சகா சாகல ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இந்த கூட்டணிக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியை ரவி கருணாநாயக்க கவனித்து வருகின்றார். சஜித்தை பிரதமராக்கி ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்குவது தொடர்பாக ஐதேக. சஜித் பிரேமதாசவுக்கு விட்ட தூதை அவர் எடுத்த எடுப்பிலே நிராகரித்து விட்டார்.

மொட்டுக் கட்சியும் இப்போது தனது தேர்தல் பணிகளை நாமலை முன்னிருத்தி நடாத்திக் கொண்டு போகின்றது. இது இரண்டாவது கூட்டணி. இது யார் ஜனாதிபதி வேட்பாளரானாலும் நாமலின் அரசியல் எதிர்காலத்தை மையமாக வைத்துத்தான் நகரும். அதுதான் மொட்டு அரசியல். அவர்கள் பல இடங்களில் கூட்டங்களை நடத்தினாலும் அங்கு ஒரு குழப்ப நிலை தெரிகின்றது.

அடுத்து பிரதான எதிர்க் கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி. அரசியல் அரங்கில் இது ஓரளவுக்கு வலுவான நிலையில் இருக்கின்றது. அதில் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளர். அவருக்குப் போட்டியாக அங்கு எவரும் இல்லை. அந்த அணியில் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு வேட்பு மனுவும் அதில் அவர்களது தனிப்பட்ட வெற்றிகளுமே பிரதானமாக இருக்கின்றன. எனவே ஒட்டிக் கொள்ள வருபவர்களிலிடத்தில் பெரிய வாக்கு வங்கி கிடையாது. சிறுபான்மை தனித்துவக் கட்சிகள் ஓரளவுக்கு அங்கு வாக்குகளை வைத்திருக்கின்றன.

இந்த முறை சிறுபான்மை சமூகங்களும் மாற்றமாக சிந்திக்கின்ற ஒரு நிலை தெரிகின்றது. எப்படி இருந்தாலும் சஜித் ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒரு நம்பிக்கையான வேட்பாளர் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் அந்த அணிக்குள் நிறையவே வெட்டுக் கொத்துக்கள். அவை அதிகாரம் மிக்க அமைச்சுக்களை-பதவிகளை அடைவதை மையமாகக் கொண்டவை. மேலும் தலைவரை தமது கட்டுப்பட்டில் வைத்தக் கொள்வதற்கு அங்கு கடும் போட்டி நிலை. புதிய வரவுகள் உள்ளே வந்தாலும் தள்ளி நில்லு என்ற அளவில்தான் வைத்துக் கொள்ளும் உபசரிப்பு அங்கு பகிரங்கமாகத் தெரிகின்றது.

Sajith Premadasa's comment! Elephant-bud alliances destroyed the noble United National Party! SJB welcomes UNP spirit! (VIDEO) - Sri Lanka News Update

மூன்று சத வீதம் என்று எதிரிகளால் நையாண்டி பண்ணப்பட்ட ஜேவிபி.-என்பிபி. இன்று மக்கள் மத்தியில் ஊடுவி வியாபித்து நிற்க்கின்றது. எல்லா அரசியல் கட்சி மேடைகளிலும் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கே பிரதான கட்சிகள் காலத்தை செலவு செய்துகின்றன. இதனால் அந்தக் கட்சிக்கு இலவசமாக ஒரு பெரும் பிரச்சாரம் கிடைக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் அவர்கள் தமது பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி. தனது கவர்ச்சிகரமான வேட்பாளர் அணுரகுமாரவை நம்பிக்கையுடன் களமிறக்குகின்றது. அங்கு அவர்கள் கூட்டணியில் கட்சிகளுக்கு இடமில்லை. தனி நபர்கள் என்பிபி.யில் வந்து இணையலாம்.

இது தவிர செல்வாக்குடன் இருந்த சுதந்திரக் கட்சி இன்று சீரழிந்து தனது சட்ட உரிமைகள் தொடர்பாக நீதி மன்றில் அடிதடிப்பட்டு நிற்க்கின்றது. அங்கு பல குழுக்கள். அணுரா யாப்பா சுசில் பிரேம்ஜயந், லன்சா ஆகியோர் அண்மையில் தெற்கு அம்பலந்தோட்டையில் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். அமரவீர ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு ஆறாயிரம் பேர்வரை வந்திருந்தார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாம்தான் தீர்மானிக்கின்ற சக்தி என்பது அவர்கள் நம்பிக்கை. கூட்டத்தில் பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். ராஜபக்ஸாக்களின் அரசியலில் இருந்து ஒதுங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு தங்குமிடம் எனலாம்.

Sri Lanka's JVP-led alliance invited for talks in Delhi for the first time - Sri Lanka News Update

குமார் குணரத்தனத்திள் முன்னிலை சோசலிஸ முன்னணியினரும் வருகின்ற தேர்தலுக்காக ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். ஐஎம்எம், மற்றும் இந்திய எதிர்ப்பை முன்னிருத்தி அமைய இருக்கின்ற இந்தக் கூட்டணியில் கோட்டாவை விரட்ட காலிமுகத்திடல் போராட்டம் நடாத்திய சிலரும் இணைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. இது தவிர ஏற்கெனவே பரப்புரையை துவக்கி இருக்கின்ற திலித் ஜனவீர இப்போது அணுரகுமர பாணியில் அவுஸ்திரேலியாவில் பரப்புரையில் இருக்கின்றார். இன வெறியர்களை உள்வாங்கியதால் அவருடன் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.;.

இப்படி கூட்டணிகள் பூத்துக் குழுங்கிக் கொண்டிருந்தாலும் டலஸ், வாசு, தயாசிரி போன்றவர்கள் இதுவரை எந்த அணியிலும் இணைந்து கொள்ளாமல் வெளியே இருக்கின்றார்கள். இவர்களை சஜித் அணியில் இணைத்துக் கொள்ள ஒரு முயற்சிகளும் நடப்பதாக ஒரு தகவல். இவர்கள் அந்த முகாமுக்கு நுழையும் போது அது அங்கிருக்கின்ற சிலருக்கு வலியையும் கொடுக்கும். சம்பிக்க, பொன்சேக்க போன்றவர்களும் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள்.

தமிழர் அரசியல்

உலகத் தமிழர்கள் மத்தியில் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிர்கள் மீது ஒரு கௌரவமும் மரியாதையும் இதுவரை இருந்து வருகின்றது. அவர்கள் படித்தவர்கள் கௌரவமானவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதனால் நீண்டநாள் அந்த நல்ல பெயர் அவர்களுக்கு. விடுதலைப் போராட்டத்தை துவங்கி முழு உலகின் கவனத்தையும் இலங்கை மீது பல தசாப்தங்களாக வைத்திருந்ததாலும் பிரபாகரன் மீதும் அந்த மண் மீதும் உலகத் தழிழருக்கு உணர்வுபூர்வமான ஒரு மரியாதை என்பதனையும் மறுக்க முடியாது.

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் பின்னரான கட்சியின் எதிர்காலமும் | Ilankai Tamil Arasu Kachchi Political Issues

ஆனால் போருக்குப் பின் வடக்கு கிழக்கு அரசியல் ஆளுமையற்ற தலைமைகளின் கைகளில் சிக்குப்பட்டு சீரழிந்து நிற்கின்றது. இன்று அங்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல்-சிவில் தலைமைகளோ இல்லை. மூத்தவர்கள் என்றும் மேதாவிகள் என்றும் சிலர் இருக்கின்றார்கள். இதனால் தமிழ் அரசியல் கட்சிகள் பலயீனப்பட்டு நிற்கிகன்றன. இந்த நிலையில் தொடர்ந்தும் தெற்கு அரசியலுக்கு தலை வணங்கி வடக்கு கிழக்கு அரசியலை முன்னெடுக்க சிலர் தமிழ் மக்களை அங்கு கட்டாயப்படுத்துவது தெரிகின்றது.
அவர்கள்தான் தமிழினத்தின் ஆசான்கள் என்ற நினைபில் உபதேசங்கள் அங்கு நடந்து வருகின்றன. இதற்கு அவர்கள் தரப்பில் என்னதான் நியாயங்களை முன்வைத்தாலும் அவை நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்பதுதான் எமது பார்வை. நாம் வழக்கமாகச் செல்வது போல அரசியல் தீர்வு தொடர்பாக தெற்குத் தலைமைகள் தமிழர்களை ஏமாற்றுவது ஒரு புறம் இருக்க, சில தமிழ் தலைவர்களே தமிழர்களை பிழையாக வழி நடாத்தி வருகின்றார்கள். இவர்கள் முதலில் இனம் காணப்பட வேண்டும். இதில் ஏற்படுகின்ற தாமதம் அந்த சமூகத்துக்குப் பாரிய சேதங்களைக் கொண்டு வரும்.
தெற்குத் தலைவர்களுடன் சந்தித்துப் பேசக் கூடடிய வல்லமையும் புலமையும் மொழி ஆற்றலும் எங்களுக்கு மட்டுமே இருக்கின்றது. அதனால் அந்தப் பிடியை வைத்த தமிழ் மக்களின் தவைர்களாக தம்மை காட்டிக் கொள்ள முனையும் ஒரு அரசியலும் அங்கு நடக்கின்றதோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் ஒரே கட்சிக்குள் இருக்கின்றவர்கள் இன்று ஆளும் தரப்பும் எதிரணியும் போல தமிழ் பிரதேசங்களில் முரண்பாடான கருத்துக்களை விதைத்துக் கொண்டு வருகின்றார்கள். இப்படியான நிலையால் மக்கள் மத்தியில் அரசியல் தலைமைகள்-கட்சிகள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுவது இயல்பானதே. இதனால் சந்திகள் தோரும் கட்சிகள் முளைப்பதும் தவிர்க்க முடியாதது.
நேரடியாகச் சொல்வதானால் தமிழரசுக் கட்சிக்கு சிரிதரன் தலைவர் என்று சொல்லப்பட்டாலும் அவரை மீறி அல்லது அவருக்கு அப்படி ஒரு பதவி இல்லை என்ற நிலையில்தான் அந்தக் கட்சியில் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தக் காட்சிகள் அங்கு பகிரங்கமாகத் தெரிகின்றன. பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இணக்கமில்லாத நிலையில் பேசி வருகினற போது சிரிதரன் பொது வேட்பாளர் கருத்துக்கு ஆதரவாக இருக்கின்றார்-பேசுகின்றார். இதற்கு இப்படி ஒரு கருத்தையும் கூறுவார்கள்-கூறுகின்றாhகள். கட்சி அரசியல் என்றால் ஒரு கட்சிக்கள் பல கருத்துக்களை உடையோர் இருப்பது தவிர்க்க முடியாதது என்று வாதிடுவார்கள். இது நமக்கும் தெரியாமல் இல்லை.
ஆனால் ஒரு கட்டுக் கோப்பான அரசியல் இயக்கமாக இருந்தால் கருத்துக்கள் கட்சி மட்டத்தில்தான் நடக்க வேண்டும். மக்கள் முன் அல்லது பொது வெளியில் தலைவர்களுக்கிடையில் மோதல் முரண்பாடு என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கட்சிக்குள் நடக்கின்ற அதிகார போட்டியின் வெளிப்பாடாகவே நமக்குப் படுகின்றது. வலுவான அரசியல் இயக்கமாக இருந்தால் தலைவர்கள் ஒருமித்த கருத்து முடிவுகளுடன்தான் சந்திக்கு வர வேண்டும். இப்படியான தமக்குள் முட்டி மோதுகின்றவர் சமூகத்துக்கு எப்படி விமோசனம் பெற்றுத்தர முடியும். அவர்கள் தமது தனிப்பட்ட இருப்புக்காகவும் இடத்துக்காகவும்தான் இந்த குழப்பங்களை செய்து வருகின்றார்கள்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது குழப்பம் | Srilanka Political Crisis Tamil Arasu Kachchi
தலைமைகள் ஐக்கியமாகச் செயலாற்றினால்தான் எதிரியும் அச்சமடைவான். இன்று என்ன நடக்கின்றது சுமந்திரன் தரப்பினர் சஜித்தையும் அணுராவையும் அழைத்து பேச்சுவாhத்தைகளை நடாத்தி அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற அதே நேரம் சிரிதரன் பிரான்சில் புலம்பெயர் வர்தத்தக சமூகத்துடன் பொது வேட்பாளருக்கு ஆதரவான பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றார். இது என்ன அரசியல் கட்சி? என்ன தலைமைத்துவம்.? முதலில் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும். கால தாமதம் நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும்.
கொழும்பு அல்லது தெற்கு சமயலுக்குத் தொடர்ந்தும் கருவேப்பிள்ளை சப்ளை நாங்கள்தான் என்று அரசியல் செய்வதற்கு சிலர் முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. கொழும்புடன் இணக்க அரசியல் செய்துதான் நாம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற முடியும் என்று எவராவது இன்னும் நம்புவார்களானால் இந்த ஜெம்மத்துக்கும் அவர்கள் அதனை அடைய மாட்டார்கள். அதற்கான வாய்ப்பே கிடையாது. தெற்கு அரசியல் தலைவர்கள் தேர்தல் காலத்துக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைத்தால் போதும் என்றுதான் இருந்து வருகின்றனர். அதற்கு அப்பால் ஆற்றைக் கடந்தவன் கதைதான். இதனை இல்லை என்று எவருக்காவது வாதிட முடியுமா? அல்லது என்ன நம்பிகையில்-உத்தரவாதங்களுடன் தொடர்ந்து கொழும்பு மீது இவர்கள் தமிழர்களளை விசுவாசம் காட்டுமாறு கேட்க்கின்றார்கள். முட்டிக் குனிந்தது போதாதா? தலைமுறை தலைமுறையாக இதுதான் தொழிலா?
குறிப்பாக போருக்குப் பின் தமிழ் கட்சிகள் ஆதரவு கொடுத்த தலைவர்கள் தெற்கில் வெற்றி பெற்றும், தோற்றுப் போயும் இருக்கின்றார்கள். அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு ஒத்துழைத்த தமிழ் தலைவர்கள் ஏதாவது சாதித்திருக்கின்றார்களா? பெற்றுத் தந்தவை என்று ஏதாவது இருக்கின்றதா? யதார்த்தம் அப்படி இருக்கும் போது ஒரு முறையாவது உள்நாட்டு சர்வதேசத்தின் கவணத்தை ஈர்க்கும் ஒரு முயற்ச்சிக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஏன் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது? ஏன் தமிழர்களை பிளவு படுத்த வேண்டும்.
தமிழர்களைப் பொறுத்தவரை தெற்கு அரசியல் தலைவர்கள் தீர்வுகள் தரத் தயாராக இல்லை. குறைந்தது எழுத்து வடிவில் இருக்கின்ற பதின்மூன்றைக் கூட அவர்கள் வழங்கத் தயாராக இல்லை. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சியே தமிழர்களை ஏமாற்றி விட்டது. இந்தியா கூட தமிழர் விவகாரத்தில் இப்போது அலட்டிக் கொள்வதில்லை. அது சீனாவுக்கு அஞ்சி காய் நகர்த்துகின்றது. தமிழகத்திலும் ஈழத் தமிழர் உணர்வுகள் இன்று மலுங்கிப் போய் விட்டது. சர்வதேசமும் தேர்தல் காலங்களைப் போல ஜெனீவா சீசனில் மட்டும் தமிழர் பக்கங்கை சம்பிரதாயத்துக்கு திறந்து முடி வருகின்றது.
இப்படியான பின்னணியில் தமது தரப்பில் ஒரு பொது வேட்பாளர் அல்லது பகிஸ்கரிப்பு என்ற ஏதாவது தெரிவுக்கு ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளும் ஏன் ஒன்றிணைய முடியாது என்று நாம் கேட்கின்றோம். எப்போதும் போல எட்டப்பர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் அப்படி இருந்து விட்டுப் போகட்டும். தமிழர்கள் உணர்வுகளை கிளரி அரசியல் செய்வோருக்குத்தான் நமது இந்தச் செய்தி.
Previous Story

குவைத் தீ விபத்தில் என்ன நடந்தது?

Next Story

இந்தியாவுடன் போட்டிக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் பாகிஸ்தான் - சீனா!