காசா கொடூரங்கள்:உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல்!

தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது. காசாவில் 5,00,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல்-காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். உணவு, தண்ணீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூட வழியில்லாமல் அல்லாடி வருவது பார்ப்போரை பதைபதைக்கச் செய்கிறது.

காசா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அங்கு உணவு கொடுக்க வந்த லாரியை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்ட காட்சி பலரது மனங்களையும் உலுக்கியுள்ளது. தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய ‘இனப்படுகொலை போரின்’ ஒரு பகுதியாகும். பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

சுட்டுத் தள்ளும் இஸ்ரேல் படைகள் 

In 100 days, the Israel-Hamas war has transformed the region. The fighting shows no signs of ending | WJHL | Tri-Cities News & Weather

காசாவில் உள்ள நுசிராத், புரேஜ் மற்றும் கான் யூனிஸ் முகாம்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கமால் அத்வான் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகளில் நீரழிவு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் வடக்கு காசாவில் ஆறு குழந்தைகள் இறந்ததாகவும், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் உள்ள குடிமக்கள் அல்-ரஷித் தெருவில் கூடினர். ஆம்புலன்ஸ்கள் எதுவும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாததால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் அங்குள்ள டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் மாவு வாங்கச் சென்றோம். இஸ்ரேல் ராணுவம் எங்களை நோக்கி சுட்டது. அவர்கள் சுட்டதில் பலர் இறந்து தரையிலே விழுந்து விட்டனர். இந்த தருணத்தை எங்களால் மறக்க முடியாது. முதலுதவி செய்யகூட யாரும் இல்லை” என்றார் உயிர் பயத்துடன்.

மேலும் அல் ஜசீரா ஊடகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், “இது ஒரு படுகொலை. காசாவில் உள்ள குடிமக்களை பட்டினி அச்சுறுத்துகிறது” என்றார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த நான்கு மருத்துவ மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அந்த மருத்துவமனைகளை ஒட்டியுள்ள சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ்கள் அப்பகுதியை சென்றடைய முடியவில்லை.

விவரிக்க முடியாத வலி

பாலஸ்தீன நபர் ஒருவர், செய்தி நிறுவனத்திடம், “ராணுவத் தாக்குதல் ஒரு ‘குற்றம்’” என்றார். மேலும் பேசிய பாலஸ்தீனர் ஒருவர், “நான் நேற்று முதல் காத்திருக்கிறேன். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காசா வழியாக லாரிகள் வரத் தொடங்கின. நாங்கள் உதவியை தேடி அலைந்தபோது, இஸ்ரேலிய டாங்கிகளும் போர் விமானங்களும் எங்களை நோக்கி சுடத் தொடங்கின” என்று பயத்துடன் விவரித்தார்.

AL_SIFA மருத்துவமனையின் செவிலியர் துறைத் தலைவர் ஜதல்லா அல்-ஷாஃபி இது குறித்து பேசும்போது, “இந்த நிலைமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மருத்துவமனையில் டஜன் கணக்கான மக்கள் இறந்து கிடந்தன. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன. பெரும்பாலான மக்கள் பீரங்கி, குண்டுவீச்சு, ட்ரோன் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்” என்றார்.

காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் வேகப்படுத்தியிருக்கும் நிலையில், ஜனவரி 23 முதல் வடக்கு காசாவில் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற, கால் நடையாக தெற்கு நோக்கி நீண்ட நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். காசா மக்கள் பசி பட்டினியில் சிக்கி தவிக்கும் நிலையில், அதிகார சக்திகள் அவர்கள் மீது ஏவப்படும் மிகப் பெரிய தாக்குதலாகதான் இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.

மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம்

Massacre': Dozens killed by Israeli fire in Gaza while collecting food aid | Israel War on Gaza News | Al Jazeera

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், “காசாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உயிர்வாழ உணவு உதவி தேவைப்படுகிறது. 500,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கருதப்படுகிறது.

உணவுப் பொருட்களை காசா மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாத சூழல் இருப்பதால், அம்மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், வழியில் உணவு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 30,035 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70,457 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,139 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

நள்ளிரவில் பரவிய தீ..43 பேர் பலி,

Next Story

பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..!