இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி !- அமைச்சர் ஹரின்

-ரஞ்சன் அருண்பிரசாத்-

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்?

”இலங்கையிலுள்ள விமான நிலையங்களை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கவுள்ளன. மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யவுள்ளன. உண்மையில் எமக்கு உதவியாக இருக்கின்றது. எமது எரிபொருள் நிரப்பு தாங்கிகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சூரிய சக்தியிலான மின்சாரத்தை இந்திய நிறுவனம் வழங்குகின்றது.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்காகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்லுமாறு கோரியுள்ளார்.” என இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியிருந்தார்.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்தானது, பாரதூரமான கருத்து என தெரிவித்து இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்தியா - இலங்கை உறவு

UDAYA PRABHATH GAMMANPILA

ஹரினின் கருத்து குறித்து வெளியான எதிர்ப்புகள்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்த கருத்தானது, பாரதூரமான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் ஊடாக, இலங்கையின் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்தானது, நாட்டின் இறையாண்மைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என கூறிய கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்தானது, இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சராக நியமிக்கப்படும் போது, அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட சத்திய பிரமாணத்தை மீறும் செயல் இதுவென கூறிய அவர், அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பு

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கருத்துகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

”விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு சென்று கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என கூறியிருந்தார். அது அமைச்சரவையின் கருத்தா? அரசாங்கத்தின் கருத்தா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா?. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்றால், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு குறித்து இவ்வாறான கருத்தை வெளியிட அமைச்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரம் என்ன?” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார்.

இதற்கு அளும் கட்சி சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.

”இது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயம் அல்ல.” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார்.

அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இது குறித்து பதிலளித்தார்.

”இலங்கைக்கு சுற்றுலா வருமாறு அழைப்பு விடுத்த சந்தர்ப்பத்தில், வசனங்களை இணைத்து, குறைத்து சமூக ஊடகங்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான கருத்தை கேட்டால், இந்த விடயத்தை சரி செய்துக்கொள்ள முடியும்” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

இந்தியா - இலங்கை உறவு

கொழும்பில் பாரிய போராட்டம்

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டத்திற்கான பிரஜைகள் அமைப்பு இந்த போராட்டத்தை நடாத்தியிருந்தது.

ஹரின் பெர்ணான்டோவை அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியடிப்போம் – இந்தியாவின் நாடு விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

”இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தியாவின் கருத்துகளை முன்வைக்கின்றார். ஐ.ஓ.சி இலங்கையில் இருக்கின்றது. அதானி இலங்கையில் இருக்கின்றார். அதனால், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என உணர்கின்றேன் என்ற வகையில் அவர் கூறுகின்றார்.

அவர் வீதியில் செல்லும் சாதாரண பொதுமகன் கிடையாது. ஹரின் பெர்ணான்டோ உடனடியாக அமைச்சு பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அதற்கான சிவப்பு எச்சரிக்கையையே இன்று நாம் வெளிப்படுத்த இந்த இடத்திற்கு வந்தோம்.” என இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தெரிவிக்கின்றார்.

”அமைச்சரவையில் இருப்பதற்கு ஹரின் பெர்ணான்டோவிற்கு உரிமை கிடையாது. சட்டரீதியிலும் அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை பதவி விலக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

ஹரின் பெர்ணான்டோவின் பதில்

இலங்கை கஷ்டத்தில் இருந்த போது இந்தியா உதவி செய்ததைக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இலங்கை இந்தியாவின் பகுதி என கூறியதை கீழ்தரமாக எடுத்துக் கொண்டவர்கள் குறித்து தான் வெட்கமடைவதாக தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”இந்தியாவின் நான் தெரிவித்த கருத்து நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏன் இணையத்தள சட்டமூலம் அவசியம் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அது கவலையளிக்கின்றது.

15 நிமிட உரையாடலொன்றை நடாத்திய போது, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் மாத்திரமே ஒளிபரப்பு செய்வார்கள். தமது அரசியல் நோக்கத்திற்காக அந்த கருத்துக்களை திரிவுப்படுத்தும் வகையில் தயாரிக்க முடியும். அதுவே இணையத்தளத்திலுள்ள பாரிய அச்சுறுத்தல் என்பதை நாம் முன்பிருந்தே கூறிவருகின்றோம்.

இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்ற இந்த தருணத்தில், வரலாற்றில் தொடர்புகள் குறித்து பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் பகுதி என்பது அரசியலமைப்பு ரீதியில் தவறானது என்ற விதத்தில் அர்த்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்ட ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் இருந்தார். அது குறித்து கவலையடைகின்றேன்.

அதற்கான காரணம், கடந்த 13 முதல் 14 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கையை இந்தியா பாதுகாத்தமைக்கான நன்றி கூறியிருந்தேன். இரண்டு நாடுகளும் பல விதமான ஒற்றுமையை கொண்டுள்ளமையினால், இலங்கை இந்தியாவின் பகுதி என கூறினேன். நான் இலங்கையை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை. கஷ்டத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா எமக்கு உதவியுள்ளது.

இந்தியா கடனுதவியை வழங்கும் போது இந்தியா சிறந்தது. இந்தியா எமக்கு மருந்து வகைகளை கொடுக்கும் போது இந்தியா சிறந்தது. வேறு எந்தவொரு நாட்டு கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு வருகைத் தராத போது, இந்தியா வந்தது சிறந்தது. இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்த போது இந்தியா சிறந்தது.

இந்திய முதலீட்டாளர்களை அழைக்கும் போது மாத்திரம் இந்தியா மோசமானது. முதலீடுகள் இல்லாமல் எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது?. சீனாவிற்கும் மேலே சென்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடனான தொடர்புகளை கூறி பேசியதை கீழ்த்தரமான முறையில் எடுத்துக்கொண்டமை குறித்து வெட்கப்படுகின்றேன்.”என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

Previous Story

விவாகரத்து: முஸ்லிம் பெண் எவ்வளவு காலம் ஜீவனாம்சம் பெறலாம்? 

Next Story

சர்சசைக்குரிய மல்வானை வீடு சென்ற விஜயதாச!