புதினை எதிர்த்த  அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்!

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதிபர் விளாதிமிர் புதினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.

அலக்ஸே நவால்னி

கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை, அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயன்று வருகிறது எனக் கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், “அவரது மரணம் குறித்துத் தங்களுக்கு இன்னும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அலக்ஸே நவால்னி

யார் இந்த அலக்ஸே நவால்னி?

அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார்.

ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட இவர், 2018ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களையும்கூட அமைத்தார். ஆனால், இறுதியில் அவரே வாக்களிப்பதில் இருந்து தடை விதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார். இதற்கு ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவுக்குள் நுழைந்தார்.

ரஷ்யா வந்து இறங்கிய உடனே அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அவர் தனது மனைவி யூலியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்கோவில் வசித்து வந்தார்.

அலக்ஸே நவால்னி

சிறையில் நவால்னி

நவால்னிக்கு சிறையில் என்ன நடந்தது?

கடந்த சில மாதங்களாகக் கடுமையான சிறைகளில் ஒன்றான யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள ஆர்க்டிக் தண்டனை காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நவால்னி.

நவால்னியின் உடல்நிலை குறித்து அந்த சிறைச்சாலை கொடுத்துள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமை நடைபயிற்சி முடிந்து வந்த பிறகு அவர் “உடல் நலமற்றுக் காணப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.

மேலும், “அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்துவிட்டார். உடனே மருத்துவக் குழு அழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டபோதும், அது பலனளிக்கவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.

“அவசர சிகிச்சை மருத்துவர்கள் சிறைவாசி இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும், மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதினை எதிர்த்ததால் மரணம்’

ரஷ்யா: புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்

நவால்னியின் “துயர்மிகு மரணத்திற்கு” ரஷ்ய ஆட்சியே “முழுப் பொறுப்பு” ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுவதாக அதன் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நவால்னி “சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் மதிப்புகளுக்காகப் போராடினார்” என்றும் அவரது லட்சியங்களுக்காகத் தனது “இறுதி தியாகத்தை” செய்தார் என்றும் பதிவிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், “போராளிகள் இறக்கலாம், ஆனால், சுதந்திரத்திற்கான போராட்டம் ஒருபோதும் முடிவுக்கு வராது,” என்றும் கூறியுள்ளார்.

அலக்ஸே நவால்னியின் மரணம் குறித்த தனது எக்ஸ் பதிவில், “ரஷ்ய அடக்குமுறைக்கு எதிராக” நவால்னி “தனது உயிரைக் கொடுத்துள்ளதாக” பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே குறிப்பிட்டுள்ளார்.

“தண்டனை காலனியில் அவரது மரணம் விளாதிமி புதினின் ஆட்சியில் உள்ள எதார்த்தத்தை நமக்கு நினைவூட்டுவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுவது என்ன?

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, “நவால்னியின் மரணம் குறித்து மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகள் அவர்களின் ‘சுயமான வெளிப்பாடுகளே” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெலிகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவால்னியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான தடயவியல் பகுப்பாய்வின் முடிவுகள் தற்போது வரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மேற்கு நாடுகள் ஏற்கெனவே அவற்றின் சொந்த முடிவுகளுக்கு வந்துவிட்டதாகத் தான் நம்புவதாகவும் ஜாகரோவா கூறியுள்ளார்.

Previous Story

ஜனாதிபதி உவிந்து விஜேவீர!

Next Story

சர்ஃபராஸ் கான்: ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி?