யானை பார்த்த குருடனும் அனுர இந்திய விஜயமும்!

-நஜீப் பின் கபூர்-

Picture

அனுர இந்திய பயணம்: மறைவான பக்கங்களும் யதார்த்தமும்!

பேசப்பட்ட விடயங்களும் இணக்கப்பாடுகளும் தீர்மானங்களும்!

யானை பார்த்த  குருடன் என்ற ஒரு கதை நம்மில் பலபேருக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம். அதனைத் தெரியாதவர்கள் சிலரும் இருக்கக் கூடும் என்பதால் முதலில் கதையைச் சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லி முடிப்பது நல்லது என்று எதிர்பார்க்கின்றோம். கதை இதுதான். குருடன் யானையை எங்கெல்லாம்  தடவிப் பார்த்தானோ அப்போது அவன் தொட்டுக் கொண்ட இடங்களை வைத்துதான் குருடன் யானைக்கு நாமம் சூட்டி இருக்கின்றான்.

அதனால் உரல், உலக்கை சுளகு என்று அவன் பெயர் கொடுத்தான். அது போன்றுதான் அனுர குமார இந்திய விஜயம் அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் இன்றுவரை பல்வேறுபட்ட கோணங்களில் நாம் முன்பு சொன்ன யானைக் கதை  போன்றுதான் அனுர இந்திய பயணம் பற்றிய இசு சமூகத்தின் மத்தியில் போய்க் கொண்டிருக்கின்றது. அனேகமானவை வெறும் கற்பனைக் கதைகளாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கின்றன.

இப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இன்று வரையும் என்னவெல்லாமே சிலர் எழுதிக் கொண்டும் சமூக ஊடகங்களில் சொல்லிக் கொண்டும் வருகின்றார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன் யதார்த்தத்தை மக்களுக்குத் சொல்ல வேண்டும் என்று நாம் இந்தக் கட்டுரையில் எதிர்பார்க்கின்றோம்.

அப்படியான ஒரு செய்திக் குறிப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை கண்டிப்பாக அமுல் படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தலை உடனே நடாத்த வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் விவகாரத்தில் மென்போக்கு கடைப்பிடிக்க வேண்டும் எனறெல்லாம் கோரிக்கைகள்-அழுத்தங்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த செய்தியைச் சொன்னவர்கள் இந்தத் தலைப்பு பற்றித்தான் பேசி இருக்க வேண்டும் என்ற ஊகத்தில்தான் அப்படியான செய்திகளை சொல்லி இருந்தது புரிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து இந்த அனுர விஜயத்தால் பெரிதும் நொந்து போன தரப்பாக சஜித் அணியினர் இருக்கின்றார்கள். இன்று அந்த அணியில் முக்கியஸ்தராக தன்னைக் காட்டிக் கொள்ளும் புட்நோட் சுஜிவ சேரசிங்ஹ இது ஒரு கலாச்சார தொடர்பான விஜயம் அதனை இவர்கள் கேட்டுத்தான் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் கேட்டால் வாய்ப்புக் கிடைக்கிகும் என்று வேதனையில் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதே போன்று அந்தக் கட்சி செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டார நமக்கும் அழைப்பு கிடைத்து இருக்கின்றது என்று அனுர இந்திய விஜயம் செய்திருந்த நாட்களில் சொல்லி இருந்தார். இது அரசியல் நோக்குடன் வேதனையில் சொல்லப்பட்ட செய்திகள் என்பது அரசியல் புரிகின்றவர்களுக்குத் தெரியும்.

எனவே ஆராய்ந்து பார்க்காமல் இப்படியாக வருகினற எல்லாச் செய்திகளையும் படித்தும் கேட்டும் பலபேர் குழப்பத்தில் இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனால்  இருதரப்பு இந்திய-அனுர தரப்பு சந்திப்புக்கள் தொடர்பாகவும் அங்கு என்ன நடந்தது, பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது பற்றிய விரிவான தகவல்களை நமது வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரையை வரைகின்றோம். அத்துடன் அழைப்புக்கள் எப்படி இவர்களுக்கு கிடைத்தது?

அதன் உண்மைத் தன்மைகள் என்ன?  போன்ற பல தகவல்கள் கடந்த வாரமே நமக்குக் கிடைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் அது  நமக்குக் கைகளுக்கு வந்தடைந்ததால் அதனை அவசரப்பட்டு எம்மால் தயாரித்து கடந்த வார இதழுக்கு அதனை அனுப்பி வைக்க முடியவில்லை என்ற குறிப்பையும் சொல்லி விடயத்துக்கு வருவோம்.

இன்று நமது நாட்டில் ஒரு அரசியல் கொந்தளிப்பு நிலை தொடர்ச்சியாகக் காணப்படுக்கின்றது. இந்தப் பின்னணியில் அரசியல் களத்திலும் பல மாற்றங்கள் நகர்வுகள் நடந்து வருகின்றன. செல்வாக்குடன் இருந்த அரசியல் கட்சிகள் அரசியல் செயல்பாட்டாளர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் தெளிவாக இருப்பதை மேற்கு நாடுகளைப் போன்றே இந்தியாவும் அறிந்து வைத்திருக்கின்றது. தனது பக்கத்து நாட்டில் நடக்கின்ற அரசியல் மாற்றங்கள் தொடர்பில் உன்னிப்பாக இருக்கும் இந்திய இராஜதந்திரிகள், குறிப்பாக றோ உளவுத்துரை இந்தத் தகவல்களை இந்திய மேல் மட்டங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது.

எனவே இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்தியாக வளர்ந்து வருகின்ற ஜேவிபி.யுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவதன் அவசியத்தை உணர்ந்து வைத்திருக்கின்ற இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் அனுர குமார தரப்பினருக்கு உத்தியோகபூர்வமான அழைப்பொன்றை கடந்த திசம்பர் முதல் பகுதியில் விடுத்திருந்தது. இந்த அழைப்பில் இந்திய தரப்பில் அவர்களுக்கு பத்து (10) நாட்களுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கபட்டிருந்தது. இந்த அழைப்பு மற்றும் நிகழச்சி நிரல் தொடர்பாக ஆராய்ந்த ஜேவிபி உயர் மட்டக் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த அழைப்பை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தி இருந்தது.

Anura Kumara calls on India's National Security Advisor

அதன் பின்னர் இந்திய இரஜதந்திரிகளுடன் தொடர்பில் இருந்த ஜேவிபி செயலகம். தமது தலைமைக்குள்ள வேலைப் பழு காரணமாக இந்த அழைப்பை ஐந்து நாட்களாக சுருக்கி அங்கு தாம் போக-பார்க்க வேண்டிய இடங்களை அவர்களே தீர்மானித்தும் இருந்தனர். அதற்கேற்பத்தான் இந்த ஐந்து நாள் ஏற்பாடுகள் அமைந்தன. இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு என்பதால் அதற்கான வாய்பையும் தெரிவுகளையும் இந்திய ஜேவிபி தலைவர்களுக்கே விட்டுக் கொடுத்தும் இருந்தது. எனவே நாம் மேற்சொன்னது போல இது ஜேவிபி. கேட்டுப் பெற்றுக் கொண்ட வாய்ப்பு என்று அவர்களது அரசியல் எதிரிகள் புனைகின்ற கதைகள் உண்மைக்குப் பறம்பானது என்பது தெளிவு.

அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணில்தான் இந்த அழைப்புக்குப் பின்னால் இருந்தார். அவர் சொல்லித்தான் இது நடக்கின்றது என்று ஒரு கதையையும் அரசியல் நோக்குடன் சிலர் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.  இதனாhல்தான் இந்திய உயர் ஸ்தானிகர் சேனுகா கூட இந்த விஜயத்தில் ஒரு கட்டத்தில் பங்கு பற்றி இருந்தார் என்றும் கதைகள். ஆனால் இதுவும் உண்மைக்கு முற்றிலும் முரணான ஒரு அரசியல் நயவஞ்சக் கதை. அனுர இந்திய விஜயம் பற்றி இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் சேனுக்க செனவிரத்ன கடைசி வரையும் எதுவுமே அறிந்திருக்கவில்லை. இந்திய அதிகாரிகள்தான் அவருக்கு இந்த அனுர விஜயம் பற்றி தகவல்களைச் சொல்லி ஒரு சந்திபில் அவரையும் அங்கு அழைத்துக் கொண்டார்கள். அதனால்தான் அவருக்கு அங்கு வரவேண்டியும் வந்தது.

அனுர-இந்திய அதிகாரிகள் மட்டச் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்ன வெல்லாம் தீர்மானங்கள் எடுக்கபட்டது என்பதுதான் இதில் முக்கிளமானது. இலங்கையில் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அனுரகுமார ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் என்று இந்திய கருதுவதால் அவருடன் முன்கூட்டி ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதுதான் இந்த சந்திப்புக்களினதும் அழைப்பின் நோக்கம் என்பது மிகத் தெளிவானதாக இருந்தது.

NPP delegation meets India's Foreign Secretary

அப்படி சந்தித்துக் கொண்டவர்கள் முதல் சுற்றில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடமும் பேசும் போது தமது கடந்த கால அரசியல் செயல்பாடுகள் அப்போது இருந்த சர்வதேச உள்நாட்டு அரசியல் பின்னணியில் எடுக்கபட்ட தீர்மானங்கள். அதற்கேற்பத்தான் தமது கோஷங்களும் அன்று அமைந்திருந்தது. இன்று நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் பாரிய மாற்றங்கள் பிரழ்வுகள் நடந்திருக்கின்றன. எனவே இதனால் எமது கடந்த காலக் கோஷங்களும் மாறி இருக்கின்றன-மாற்ற வேண்டியும் வந்திருக்கின்றன என்று கடந்த கால இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள்.

இதனை ஏற்றுக் கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அது உண்மைதான் நாமும் இன்றைய சர்வதேச அரசியல் பின்னணிக்கு ஏற்ப எங்களையும் மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று அனுர தரப்பு நியாயத்தக்கு அங்கிகாரம் வழங்கி இருந்தார். இன்று உலக அரங்கில் இந்திய மிகவும் செல்;வாக்கான வலிமையான ஒரு நாடு. உலகில் ஐந்தாவது பெரும் பொருளாதர வளத்தை கொண்டிருக்கின்ற நாடு. எனவே இந்திய தனது வல்லமைக்கு ஏற்ப தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாது. அதனை ஆட்சி அதிகாரத்திற்கு வர எதிர்பார்க்கின்ற பக்கத்து நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆனுர தரப்பும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

Shifting Tides: NPP's Indian Tour – Sri Lanka Guardian

மேலும் இந்தியா மிக அண்மையில் இருக்கின்ற நாடு என்ற வகையில் அதன் செல்வாக்கு ஆதிக்கம் பாதுகாப்பு என்ற விடயத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் நமது நலன்கள் தனித்தவம் பாதுகாப்ப என்ற அம்சங்களும் இதில் அடங்கி இருக்கும். எனவே இருதரப்புப் புரிதலுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் முன்னெடுத்திருக்கின்றார்கள் என்பது இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த சுற்றில் இந்திய தனது பாதுகாப்புக் குறித்தே முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. தமது அரசொன்று இங்கு ஏற்படுமாக இருந்தால் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குமா என்ற பயம் இந்தியாவுக்கு இருந்தது. இது விடயத்தில்தான் அவர்கள் கேள்விகள் எதிர்பார்ப்புக்கள் அமைந்திருந்தன. அதன்படி நமக்கு சீனாவுடன் நெருக்கமான உறவுகள் வரலாறு பூராவிலும் இருக்கின்றது. அதற்காக இந்தியாவுக்கு எதிரான களமான எமது பூமியை பாவிக்க நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டடோம் என்ற உத்தரவாதம் அனுர தரப்பால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  இந்தியாவுடன் நமக்கு இருக்கின்ற எல்லா வகையான அரசியல் பொருளாதார சமூக உறவுகளை நாம் சீனாவுடனும் முன்னெடுப்போம். எனவே அதற்காக இந்தியா அஞ்ச வேண்டியதில்லை.

Anura Kumara Dissanayake (@anuradisanayake) / X

அதே போன்ற எமது இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை நாம்  கடந்த திசம்பரில் சீனாவுக்குச் சென்ற போது சீன தலைவர்களிடம் நேரடியாக தெளிவாக சொல்லியும் இருக்கின்றோம்.சீனாவைப் போலவே எமக்கு இந்தியவும் முக்கியம். அதன் பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் அதிலுள்ள நியாயங்களை நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்  வைத்திருக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெளிவு படுத்தி இருக்கின்றார் அனுர குமார திசாநாயக்க.  மஹிந்த ராஜபக்ஸ சீனாவுடன் நெருக்க உறவில் இருக்கின்ற அதே நேரம் பசில் ராஜபக்ஸ இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து தமது தனிப்பட்ட அரசியல் பொருளாதார நலன்களுக்காக இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை நகர்த்தி வந்திருக்கின்றார்கள்.

How China got Sri Lanka to cough up Hambantota Port - Report | ONLANKA News

சீனாவிடமிருந்து கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்ற காசோலையின் பிரதி இன்றும் தன் கைவசம் வைத்திருக்கின்றேன் என்றும் அனுர கூறுகின்றார். எனவே நாம் தனிப்பட்ட நலன்களுக்குhக நாட்டை ஒருபோதும் தாரைவார்த்தக் கொடுக்க மாட்டோம். எமது வெளி விவகாரக் கொள்கை முற்றிலும் நடுநிலையாக இருக்கும். இராணுவ ஆதிக்கத்துக்கும் நாம் இங்கு எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அனுர இந்தியாவுக்கு உறுதி கூறி இருக்கின்றார். இதனைத்தான் இந்தியாவும் அவர்களிடத்தில் எதிர்பார்த்திருக்கும்.

பெரும்பாலனானவர்கள் எதிர்பார்ப்பது போல இனப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் பதிமூன்றாவது திருத்தம் தொடர்பாக நாம் ஒரு வார்த்தை கூட இந்த சந்திப்புக்களின் போது  பேசவில்லை. இது ஒரு துவக்க சந்திப்பு என்பதால் இந்தியத் தரப்பில் அவர்களும் இதனை நமக்கு முன்வைக்கவில்லை. எனவே சிலர் இது தொடர்பாக பேசியதாக சொல்லும் கதைகள் உண்மையானதல்ல. அது குருடன் பார்த்த யானையின் கதைகள்.  அவர்கள் தமது பாதுகாப்பு நலன்களில்தான் ஆர்வமாக இருந்திருக்கின்றார்கள். இதற்கான சந்திப்புகள்தான் அதிகாரிகளுடன் அதிகளவில் அமைந்தன.

AKD and delegation visit Amul Dairy - DailyNews

அமூல் நிறுவனத்துக்கு அனுர தரப்ப விஜயம் முன்னுக்கப் பின் முரணாக இருக்கின்றது அனுர அமூலில் இருக்கின்ற அதே நேரம் இங்கு அவர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாமல் கருணாரத்ன அதே ஆமூலுக்கு எதிராக கோஷங்களை இங்கு போட்டுக் கொண்டிருக்கின்றாh.; இது முரண்பாடு இல்லையா என்று அனுர குமாரவிடம் கோட்டால். ஆம், இந்த அமூல் விவகாரத்தில் எமக்கு முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றது. இந்த அமூலுக்கு நான் இதற்கு முன்னரும் பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன் அங்கு போய் பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வுகளைச் செய்திருக்கின்றோன்.

இந்த அமூலுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற போது மிகப் பெரிய ஊழல்களை இங்குள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகள் செய்து பணம் கொள்ளையடித்திருக்கின்றார்கள். இந்த அனுகுமுறைகள் காரணமாக அமூலுடன்  நாமக்கு முரண்பாடுகள் இருக்கின்றது. இந்த சந்திப்பில் கூட நாம் இலங்கையுடன் அமூல் மேற்கொண்ட இணக்கப்பாடுகள் ஊழல் மிக்கது. அதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதனை இந்திய அதிகாரிகளுக்கு முகத்திற்கே இந்த சந்திப்பில் சொல்லி இருக்கின்றோம். அதனால் தான் அமூலுடன் இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் நமக்கு இன்றும் இருக்கின்றது என்பது அனுர தரப்பு வாதமாக இருக்கின்றது.

நமது தனித்துவங்களுடன் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமில்லாத வகையில் தமது ஆட்சியை இலங்கையில் முன்னெடுப்பதில் இந்திய-அனுர தரப்பினர் துவக்க இனக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றார்கள் என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது. நாம் பகிரங்கமாக சொல்லி இருக்கின்ற கருத்துக்கள் கற்பனையோ வெறும் ஊகத்தின் அடிப்படையிலான கண்டு பிடிப்புக்களோ அல்ல என்பதனையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தமது பக்கத்து நாடொன்றில் ஆட்சி மாற்றம் ஒன்று வருமாக இருந்தால் முன்கூட்டி எப்படியான நகர்வுகளை இராஜதந்திர ரீதியில் எடுக்க வேண்டும் என்பதற்கு இந்தியாவின் அனுகுமுறை ஏனைய நாடுகளுக்கு சிறப்பான உதாரணம் இது.

நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Next Story

காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம்- நெதன்யாகு