பாலின பரிசோதனை சர்ச்சை: வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி

இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃபிற்கு எதிரான தனது ஒலிம்பிக் போட்டியை 46 வினாடிகளுக்குள் கைவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,” என்று கூறி அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தகுதி தரநிலைகளை அடைய தவறியதால் கடந்த ஆண்டு மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இரு வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் ஒருவர் கெலிஃப்.

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்தவில்லை. ஆனால், தற்போது பாரீஸில் நடைபெற்று வரும் போட்டிகளை இந்த கமிட்டிதான் நடத்துகிறது.

66 கிலோ எடைப்பிரிவு வீராங்கனையான கெலிஃபின் ‘டெஸ்டோஸ்டிரோன்’ எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகரித்ததால், இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் முன்னேறிய 25 வயதான கெலிஃப், அரங்கிற்கு வந்தபோது அல்ஜீரிய மக்கள் ஆரவாரமாக கைத்தட்டி அவரை வரவேற்றனர். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இமானே கெலிஃப் மற்றும் ஏஞ்சலா கரினி
அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்புடன் போட்டியிட்ட இத்தாலி குத்துசண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி

46 விநாடிகள் மட்டுமே நீடித்த போட்டியில் என்ன நடந்தது?

30 விநாடிகளுக்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கிய பிறகு, கரினி தன் தலைக்கவசத்தை சரிசெய்வதற்காக தன்னுடைய பயிற்சியாளரிடம் சென்றார். பிறகு விளையாட வந்த அவர், விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் பயிற்சியாளரிடம் சென்றார்.

கெலிஃபின் கையை நடுவர் உயர்த்தி, வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்பு, “இது சரியில்லை” என்று கரினி கூறுவதை கேட்க முடிந்தது.

போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தார்.

“என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை. என் மூக்கில் ஒரு பலத்த வலியை உணர்ந்தேன். என் அனுபவத்திற்கும், ஒரு பெண்ணாக எனக்கு இருக்கும் முதிர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை என்னுடைய நாட்டினர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நான் எனக்குள்ளே கூறிக் கொண்டேன். என் அப்பா இதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன். எனக்காக நான் இந்த போட்டியை நிறுத்தக் கூறினேன்” என்று கரினி பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.

“இந்த போட்டி என் வாழ்நாளில் மிக முக்கியமான போட்டியாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் நான் என் உயிரை காப்பாற்ற வேண்டியிருந்தது,” என்றும் அவர் கூறினார்.

“எனக்கு பயம் இல்லை. விளையாட்டு மேடையை கண்டு பயப்படவில்லை. அடி வாங்க பயமில்லை. ஆனால் இந்த முறை, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. என்னால் முடியவில்லை என்பதால்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்,” என்றும் கூறினார் கரினி.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, “ஒரு போட்டியில், சமமான இருவர் போட்டியிடுவது முக்கியம். ஆனால் என்னுடைய பார்வையில், அது சமமான போட்டி அல்ல,” என்று குறிப்பிட்டார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

கெலிஃப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கரினி “அவர் இறுதி போட்டி வரை செல்ல வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று கூறினார்.

“இவர்கள் சரி, இவர்கள் தவறு என்று மற்றவர்களை மதிப்பிட நான் இங்கு வரவில்லை,” என்றும் கூறினார் கரினி.

தான் பங்கேற்ற 50 சண்டை போட்டிகளில் ஒன்பது முறை தோல்வியடைந்த கெலிஃப், “நான் தங்கப் பதக்கம் பெறவே இங்கே வந்தேன். நான் அனைவரையும் எதிர்த்து விளையாடுவேன்,” என்று பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.பாரிஸ் ஒலிம்பிக் 2024: அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீஃப்

                                          அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீஃப் (இடது)

கெலிஃப் மீதான, ”ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளை அல்ஜீரியாவின் ஒலிம்பிக் கமிட்டி கண்டித்து ஒரு நாள் ஆன நிலையில் இந்த போட்டி நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்ட தைவானின் லின் யூ-டிங் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.

பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்துள்ள அனைத்து குத்துச்சண்டை வீரர்களும் போட்டிகளுக்கான தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளனர் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

செவ்வாயன்று, கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ்,”இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் திடீரென்று ஒன்றும் தோன்றவில்லை,” என்று கூறினார்.

‘உரிய நடவடிக்கை எடுத்தோம்’ – சர்வதேச குத்துசண்டை சங்கம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி
                                                      இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

கெலிஃப் மற்றும் லின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) ஏற்பாடு செய்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த சங்கத்தின் சர்வதேச போட்டிகளை நிர்வகிக்கும் அந்தஸ்த்தை நீக்கி அறிவித்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

இந்த கமிட்டி தான் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இம்முறை பாரீஸிலும் இந்த அமைப்பே குத்துச் சண்டை போட்டிகளை நடத்தி வருகிறது.

போட்டியின் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக இந்த இரண்டு வீராங்கனைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக புதன்கிழமை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கூறியது.

”அவர்கள் ‘டெஸ்டோஸ்டிரோன்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஒரு தனி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் முடிவுகள் ரகசியமாக இருக்கும்”

”இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தேவையான தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை சோதனையானது உறுதி செய்தது. மேலும் மற்ற பெண் போட்டியாளர்களை விட சில அனுகூலங்கள் அவர்கள் பெற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டது” என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்தது.

என்ன தகுதி சோதனைகள் நடத்தப்பட்டன என்பதை பிபிசியால் கண்டறியமுடியவில்லை

2022-இல் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவ்விரண்டு வீராங்கனைகளுக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு மீண்டும் 2023-லும் நடத்தப்பட்டது.

2023ம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, லின் அதற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், கெலிஃப் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் பின்னர் அதை வாபஸ் பெற்றதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கூறியது.

வியாழன் அன்று பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசிய சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைமை நிர்வாகி கிறிஸ் ராபர்ட்ஸ், “எங்கள் மருத்துவக் குழு கொண்டிருந்த ஐயப்பாடுகளின் காரணமாகவே இந்த இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டனர்,” என்று கூறினார்.

“நாங்கள் சரியான நடவடிக்கையைதான் எடுத்தோம். இது எங்கள் குத்துச்சண்டை போட்டிகளுக்கு மட்டுமே சரியானது,”

“அவர்கள் (லின் மற்றும் கெலிஃப்) பெண்களாக போட்டியிட தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.” என்று அவர் கூறினார்.

இது ஒரு ‘பாலின சோதனையா?’ என்று கேட்டதற்கு, “ஆம்” என்று கூறினார் ராபர்ட்ஸ்.

“தகுதி தரநிலைகளை மற்றும் சோதனைகளில் ஒரு வீராங்கனை மற்றொரு வீராங்கனையை வீழ்த்தினால், அந்த நபர் பெண் போட்டியாளராக இருக்க தகுதியற்றவர் என்றே அர்த்தம்,” என்றும் அவர் கூறினார்.

Previous Story

கிணற்றுத் தவளைகளின் கணிப்பீடு!

Next Story

மொட்டுகளின் பெரும்பான்மை ரணிலுடன் MP-115கள்