பாடசாலை உதைப்பந்தாட்டம்: அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றது கலகெதர ஜப்பார் .

Multilac நிறுவன தர அடையாளத்தின் அனுசரணையில் இலங்கை பாடசாலை உதைப்பாந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த 10 வயதின் கீழான தேசிய பாடசாலை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள்  கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நிலையில் கலகெதர ஜப்பார் அணி குழு நிலை சம்பியன் (Table Top Champion) பட்டத்தை தன்வசமாக்கிக் கொண்டதுடன் ஜப்பாரின் வரலாற்றில் 10 வயதின் கீழான அணியொன்று தேசிய மட்டத்தில் வெற்றிபெற்றமை இதுவே முதற்தடவையாகும்.

குறித்த தேசிய மட்டப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் மாவட்ட மட்டப் போட்டிகள் 2024.03.07 ஆம் திகதி கம்பளை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதோடு குறித்த மாவட்ட மட்டப் போட்டியில் திறமையாக விளையாடிய ஜப்பார் அணி 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் நடபெற்ற தேசிய மட்டப் போட்டித் தொடரில் ஜப்பார் அணி உள்ளடக்கப்பட்டிருந்த குழுவில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யாலோக்க கல்லூரி, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த ராஹுல கல்லூரி மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த புனித ஜோஸப் கல்லூரி என்பன இடம்பெற்றன.

இதனடிப்படையில் ஜப்பார் அணி ஆரம்பமாக காலி-வித்யாலோக்க கல்லூரிக்கு எதிராக களமிறங்கி திறைமையாக விளையாடிய நிலையில் குறித்த போட்டியானது 0-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி தோழ்வியின்றி முடிவடைந்தது.

இரண்டாவது போட்டியில் ஜப்பார் அணி மாத்தறை-ராஹுல கல்லூரியை சந்தித்ததுடன் குறித்த போட்டியில்  ஆரம்பம் முதலே தமது திறமைகளை வெளிக்காட்டிய ஜப்பார் அணி மாத்தறை அணியை 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது போட்டியில் கொழும்பு-புனித ஜோஸப் கல்லூரியை எதிர்த்த ஜப்பார் அணி மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டதுடன் இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தெரிவாகியது.

குழு நிலையில் முதலிடம் பிடித்த (Table Top) அணிகளுக்கான இறுதிச் சுற்றுப் போட்டிகளை எதிர்பாராத காலநிலை மாற்றம் காரணமாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து குழு நிலையில் முதலிடம் பிடித்த (Table Top) அணிகளை குழுநிலை சம்பியன்களாக (Table Top Champion) அறிவிக்க ஏற்பாட்டுக்குழு முடிவெடுத்தது. இதனடிப்படையில் கலகெதர ஜப்பார் அணி குழு நிலை சம்பியன் (Table Top Champion) பட்டத்தை தன்வசமாக்கிக் கொண்டது.

மேற்படி போட்டித் தொடரில் தமது திறமைகளை வெளிக்காட்டி கண்டி மாவட்டத்துக்கும் கலகெதர ஜப்பாருக்கும் பெருமை சேர்த்த ஜப்பாரின் அணியினருக்கும், அவர்களை வழி நடாத்திய கல்லூரி அதிபர் ஜனாப் பஸால் மொஹமட்,

விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான  அம்ஜாட் முதாலிப்,

ரிப்கி மொஹமட்

ஆகியோருக்கும் ஜப்பார் 10 வயதின் கீழான அணியின் பயிற்றுவிப்பாளருமான ஜனாப் றிம்ஷாட் கணி அவர்களுக்கும் மேற்படி அணிக்குத் தேவையான சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், விளையாட்டுக் கழகங்கள் ஏனைய அமைப்புகள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் உள்ளடங்களாக சகலருக்கும் ஜப்பார் பழைய மாணவர் சங்கமானது தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Previous Story

ரணில் இரு தோணியில்!

Next Story

நிரம்பி வழியும் அந்நியர்!