ஞானவாபி மசூதி: தொழுகையை தொடரலாம்– உச்ச நீதிமன்றம்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே தொழுகை செய்ய அனுமதி என்ற மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரித்தனர்.

திங்களன்று அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர் ஜெய்ன் எனும் வழக்கறிஞர் உள்ளூர் நீதிமன்றத்தை அணுகியதும், வளாகத்திற்குள் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறும், அப்பகுதிக்குள் ஆட்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல என்றும் செயற்கை நீரூற்று அமைப்பு (ஃபவுண்டைன்) என்றும் ஞானவாபி மசூதி நிர்வாகம் கூறியுள்ளது. அக்குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான குளம் என்று மசூதி தரப்பு தெரிவிக்கிறது.

சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறப்படும் குளம் உள்ள பகுதியை சீல் வைத்து பாதுகாப்பது மாவட்ட ஆட்சியர், பனாரஸ் மாநகர காவல் ஆணையர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டன்ட் ஆகியோரின் தனிப்பட்ட பொறுப்பு என்று நீதிபதி ரவி குமார் திவாகர் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பின் 30க்கு 30 அடி அளவுள்ள இந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாக பனாரஸ் மாவட்ட ஆட்சியர் பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளார்.

மசூதியின் முக்கிய நுழைவாயில் அடைக்கப்படவில்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த குளம் உள்ள பகுதி மசூதி வளாகத்தில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மசூதியில் கோயில் இருந்ததா? – வழக்கின் பின்னணி

16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி

18 ஆகஸ்ட் 2021 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் மா சிருங்கர் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையை ஒட்டிய தசாஷ்வமேத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிளாட் எண் 9130இல் அன்னை சிருங்கர் தேவி, ஹனுமன் மற்றும் விநாயகர் மற்றும் அடையாளம் புலப்படாத இந்து தெய்வங்கள் இருப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு, மசூதியில் உள்ள தெய்வ சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு சனிக்கிழமை முதல் நாள் ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது.

வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.

அதன்படி சனிக்கிழமை அந்த ஆய்வு தொடங்கியது. அதை எதிர்த்தே மசூதி தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

மசூதி நிர்வாகத்தை கவனித்து வரும் அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.

ஞானவாபி மசூதியில் நடைபெற்று வந்த ஆய்வு நேற்று (திங்கள்கிழமை) முடிவடைந்தது. இந்த ஆய்வின்போது மசூதியில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்றதாக, இந்து தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என, முஸ்லிம் தரப்பினர் நிராகரித்துவிட்டனர்.

Previous Story

தாக்குதலுக்கு உத்தரவிட்டவரே  கோட்டபாயதான் - விமல் வீரவன்ச

Next Story

“என் அம்மாவின் போராட்டம் மட்டும் அல்ல...” - விடுதலை குறித்து பேரறிவாளன்