சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

தெற்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியருக்கு, 2019ல் பிறந்த மகள் ரியா. பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு கல்லீரலில் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.குழந்தைக்கு ஒரு வயதான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக கல்லீரல் தானம் வழங்கும்படி கேட்டு, பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விற்பனை பிரிவு அதிகாரி சக்திபாலன் பாலதண்டாயுதம், 28, உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டார். பின், தன் கல்லீரலின் 23 சதவீதத்தை குழந்தைக்கு 2020 செப்., மாதம் தானம் வழங்கினார்.

இதையடுத்து நடந்த அறுவை சிகிச்சை முடிவில், குழந்தையின் நோய் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.
இந்நிலையில், பாலதண்டாயுதத்திற்கு 2021ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் சிறந்த நபர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.அவரிடம் விருது மற்றும் 11 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கி பாராட்டினார்.

Previous Story

'அல்லா ஹு அக்பர்''-மாணவி முஸ்கான்

Next Story

இலங்கை-தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா நிறைவு.