கத்தார் உலகக் கோப்பை கால்பந்து

ஃபிஃபா மற்றும் கத்தார் உலகக் கோப்பை ஒருங்கிணைப்பாளர் தவிர்க்க நினைத்த, அண்மை கால தலைப்பு செய்திகளின் பட்டியல் இதுவாகும்.

உலகக் கோப்பை போட்டி தொடங்கும் நிலையில் ‘தன்பாலினத்தவர் பாலியல் உறவு மனதை பாதிக்கும்’ என்ற உலகக் கோப்பை போட்டிக்கான அதிகாராப்பூர்வ தூதரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் உலகக் கோப்பை

ஜெர்மன் ஒளிபரப்பாளர் ZDFக்கு முன்னாள் கத்தார் சர்வதேச கால்பந்து வீரர் காலித் சல்மான் அளித்த பேட்டியானது, யுக்ரேன் போர், பேச்சு சுதந்திரம், பணியாளர்கள் உரிமை உள்ளிட்ட உலகக்கோப்பை போட்டியை சுற்றிய சர்ச்சை விஷயங்களின் பட்டியலில் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இருந்து.

உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் அரசியலாக்கப்பட்டது இந்த போட்டிதான் என்று சொல்லப்படுவதை நோக்கி இந்த சர்ச்சைகள் இட்டு சென்றன.

எல்ஜிபிடி உரிமைகள்

“புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான விஷயங்களில் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதன் வழியே, எல்ஜிபிடி ப்ளஸ் மக்களின் வாழ்வையும் முன்னெடுப்பதற்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது,” என்றார் லிவர்பூல் FC LGBT+ குழுவான (Kop Outs)காப் அவுட்ஸ் என்ற அமைப்பின் நிறுவனர் பால் அமன்.

உலகக் கோப்பை ஒருங்கிணைப்பு கமிட்டியின் சுற்றுலா ஏற்பாட்டின் ஒரு பகுதியாக தனது கணவருடன் அவர் 2019ஆம் ஆண்டு கத்தாருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தன் பாலினத்தவர்கள் இடையிலான உறவுகள், மற்றும் தன் பாலினத்தவர்கள் உறவுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வது கத்தாரில் சட்டவிரோதமாகும். மேலும், அபராதம் முதல் மரண தண்டனை வரை வழங்கக்கூடிய தண்டனைகளைக் கொண்டதாகும்.

எல்ஜிபிடி உரிமைகள்

உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தும் அதிகாரிகள், ஒவ்வொருவரையும் எங்கள் நாட்டுக்கு வந்து போட்டிகளை காணும்படி வரவேற்கின்றோம். யாரிடமும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று கூறியிருந்தனர்.

ஆனால், காலித் சல்மானின் நேர்காணல் போன்ற நிகழ்வுகள் போட்டி பற்றிய முந்தைய நம்பிக்கையை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டது.

“இத்தகைய விவகாரங்களில் மாற்றத்தை கோருவதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கத்தார் உண்மையில் எல்பிஜிடி ப்ளஸ் பாகுபாட்டை வலுப்படுத்தியுள்ளது வருத்தமாக உள்ளது,” என்றார்.

ஓரின சேர்க்கையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது, பாலினம் சரி செய்யும் சிகிச்சையை பயன்படுத்துதல் ஆகியவை குறித்த செய்திகள் காரணமாக உலக கோப்பைக்கு செல்வது பற்றி பவுல் இனி யோசிக்க மாட்டார் என தெரிகிறது.

“போட்டிக்கு செல்வது பற்றி சிந்திப்பது மனசாட்சியற்றதாக இருந்தது. கத்தார் அதிகாரிகள் தொடர்ந்து எல்பிஜிடி ப்ளஸ் மக்களை மிகவும் மோசமாக நடத்துவது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது,” என்றார்.

கால்பந்து வீரர்களின் போராட்டங்கள்

சர்வதேச அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை குழுக்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்தது போலவே, ஆடுகளத்தில் இருந்தும் போராட்டங்கள் வந்திருக்கின்றன.

டென்மார்க் அணியானது, தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில், நாடு மற்றும் பிராண்ட் லோகோ தெளிவாகத் தெரியாத வகையில் ஆடை அணிய உள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட 9 இதர நாடுகளின் அணித் தலைவர்கள் ஒன் லவ் என்பதை குறிக்கும் வானவில் லோகோ கொண்ட கைபட்டையை அணிய உள்ளனர்.

கால்பந்து வீரர்களின் போராட்டங்கள்

வீரர்கள் இது போன்ற அடையாளங்களை உபயோகிப்பது என்பதானது, போட்டிகளின் போது அரசியல் போராட்டத்தை உருவாக்கும் வீரர்களை தடை செய்ய வழிவகுக்கக் கூடிய உலக கோப்பை போட்டிகளுக்கான விதிமுறைகளை மீறும் செயலா இல்லையா என்பதை சொல்லும்படி அணிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

ஆனாலும் இது குறித்து ஃபிஃபா தெளிவுபடுத்தவில்லை. எங்கே இது போன்ற வரம்பை நிர்ணயிப்பது என்பது குறித்த பணியை மேற்கொள்ள முயற்சிப்பது கால்பந்து ஆளுகை அமைப்புக்கு ஒரு சிக்கலான பணியாகவே இருக்கிறது என கல்வியாளர் மற்றும் சர்வதேச விளையாட்டு வழக்கறிஞரான டாக்டர் கிரிகோரி அயோனிடிஸ் நம்புகிறார்.

“நார்வே வீரர்கள் அண்மையில் , தங்களுடைய சட்டைகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். இது ஒரு அரசியல் அறிக்கையாக கருதப்படுமா?”

“எனக்குத் தெரியவில்லை. அரசியல் அறிக்கை என்றால் என்ன என்று உங்களால் வரையறுக்க முடியுமா? யாராலும் முடியும் என்று நான் கருதவில்லை. இந்த தருணத்தில் இந்த பிரச்னையைத்தான் ஃபிஃபா எதிர்கொள்கிறது.”

“ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் என்பது ஒரு அடிப்படையான சமூக விஷயமாக இருக்கிறது. இது அரசியல் பற்றியது அல்ல. அது குறித்து வெளியே பேசுவதற்காக வீரர்கள் தண்டிக்கப்படக்கூடாது,” என்றார் பால் அமன்.

ஆனால் போட்டி தொடங்கும் போதுதான் அந்த ஆதரவாளர்கள் (வீரர்கள்) விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைக் கண்டறிய முடியும்.

ஆயிரக் கணக்கில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலி

கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவது கத்தாரில் இன்னொரு விஷயமாகி இருக்கிறது. இது குறித்து சில வீரர்கள் வெளியே பேச வேண்டும் என்பது சில தன்னார்வலர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

“அட இது அரசியல்தான், உங்கள் மீது ஏதேனும் தடை இருக்கும்’, என ஃபிஃபா கூறுவது மிகவும் தவறு என்று நான் நினைக்கிறேன் என்கிறார் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளுக்கான விசாரணை கலந்தாய்வு அமைப்பான ஈக்விட்மின் என்ற நிறுவனத்தின் நிறுவனர் முஸ்தபா காத்ரி.

உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்க உதவியவர்கள் உள்ளிட்ட கத்தாரில் உள்ள பணியாளர்களிடம் அவர்கள் பேச வேண்டும். அவர்கள் வேலைவாய்ப்புகளை பெற கட்டணம் வசூலிக்கப்பட்டது, தங்களது சம்பளத்தை பெறுதல், அதிக வெப்பமுள்ள அபாயமான இடங்களில் பணியாற்ற வலுக்கட்டாயப்படுத்தியது போன்ற விஷயங்களையும் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை வென்றது முதல் 6000 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக சில செய்திகள் சொல்கின்றன.மைதான கட்டுமானப் பணி

மைதான கட்டுமானப் பணி

எனினும், இந்த ஒட்டு மொத்த எண்ணிக்கை தவறான தகவலை கொண்டிருப்பதாகவும், உலகக் கோப்பை மைதானங்களின் கட்டுமான இடங்களில் 37 தொழிலாளர் மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருப்பதாகவும், அதில் மூன்று இறப்புகள் மட்டுமே பணியோடு தொடர்புடையது என்றும் கத்தார் அரசு கூறுகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை மாறுவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உரிமையாளரின் அனுமதியைப் பெற வேண்டியதை கட்டாயப்படுத்தும் கஃபாலா எனும் தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் முறை ஒழிக்கப்பட்டிருப்பது நிலைமைகள் மேம்பட்டுள்ளன என்பதற்கு சான்றாகும் என்று கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர்.

“சில சீர்திருத்தங்கள், சில ஊழியர்களுக்கு நிச்சயமாக பலன்தரும். மாற்றங்கள் போதுமான அளவுக்கு சென்று சேரவில்லை என்பது தெளிவு,” என முஸ்தாபா சொல்கிறார்.

சர்ச்சைக்குரிய முடிவு

எல்ஜிபிடி மற்றும் ஊழியர் உரிமைகள் தொடர்பான சர்ச்சைகள் என்பது கத்தாருக்கு போட்டிகள் நடத்தும் உரிமையை வழங்கிய ஃபிஃபாவின் முடிவை பலர் கேள்விக்கு உள்ளாக்குவதை நோக்கி சென்றிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் சுவிஸ் வழக்கறிஞர்கள் மற்றும் அமெரிக்க நீதித் துறையால் தொடங்கப்பட்ட இரண்டு விசாரணைகளுடன், பரவலான ஊழல் குற்றச்சாட்டுகளால் இந்த செயல்முறை முடங்கியுள்ளது.

கத்தார் எப்போதும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது, 2017ஆம் ஆண்டு ஃபிஃபா மேற்கொண்ட சொந்த விசாரணைக்குப் பின்னர் கத்தாருக்கான ஏலம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த முடிவை ஆதரிப்பவர்கள், நாடுகளை விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பது அந்த நாடுகள் நம்பிக்கையுடன் இருப்பதையும் அவை மாற்றவும் உதவும் ஒரு சிறந்த வழி என்று பரிந்துரைத்துள்ளனர், ஆனால் முஸ்தபா “தற்போதுள்ள மனித உரிமை பிரச்சினைகள் அதிக கவனத்தை ஈர்த்துவிட்டாலும், கத்தார் நாடானது எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்வதற்கான ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவதாக இல்லை,” என்றார்.

“மாற்றத்தை முன்னெடுக்கும் முயற்சியாகவே கத்தாருக்கு போட்டியை நடத்தும் வாய்ப்பை ஃபிஃபா வழங்கியிருக்கலாம் என்பது அதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்” என்று டாக்டர் கிரிகோரி அயோனிடிஸ் கூறுகிறார்.

“தங்களையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்க வேண்டும் என்பதை (கத்தார்)அவர்கள் விரும்புகின்றனர். எனவே இந்த உலகத்துக்குள் அந்த நாட்டிற்கான கதவுகளை நீங்கள் திறக்கும்போது, தனிமனித சுதந்திரம் மற்றும் பலவற்றின் அடிப்படையான விஷயங்களில் மாறுபட்ட கோணத்தை முன்னெடுக்க அந்த நாட்டை நீங்கள் வற்புறுத்தலாம்,”

ஒரினச்சேர்க்கையாளர்கள், ஊழியர்கள் உரிமைகள் தொடர்பான தொடர் விமர்சனங்கள் ஃபிஃபா தவறான முடிவை எடுத்து விட்டது என்று சிந்திப்பதை நோக்கி இட்டுச் செல்லும்.

வெளியேற்றம்

தகுதிக்கான வரம்பின் போதே போட்டியில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றிய முடிவு சர்வதேச அளவில் பேசுபொருளானது.

ஆடுகளத்தில் விதிகளை மீறியதற்காக அல்லது நிர்வாக மீறல்களுக்காக நாடுகள் இடைநீக்கம் செய்யப்படுவது அசாதாரணமானது அல்ல என்றாலும், கால்பந்து அல்லாத குற்றத்திற்காக ஒரு அணிக்கு தடை விதிக்கப்படுவது மிகவும் அசாதாரணமானது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் மட்டுமே ஜெர்மன், ஜப்பான் அணிகளும், நாட்டில் நிலவிய நிறவெறி காலத்தின்போதும் தென்னாப்பிரிக்க அணியும் இதே போன்ற தடைகளை எதிர்கொண்டன.

“அரசியல் அறிக்கைகளை போட்டிக்கு வெளியே வைத்திருக்கவே ஃபிஃபா முயற்சிக்கிறது. ஆனால், ஃபிஃபா, தன்னளவில் ஒரு அரசியல் அமைப்பாக இருக்கிறது,” என அதன் முடிவு குறித்து டாக்டர் அயோனிடிஸ் கூறுகிறார்.

“தவிர்க்க முடியாத பட்சத்தில் ஃபிஃபா அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

இறுதியாக ரஷ்யாவை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை என்பது அதன் பிளே-ஆஃப் சுற்றுக்குள் இருந்த போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாட்டின் அணிகள் யுக்ரேன் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அணிக்கு எதிராக விளையாட மறுத்த பின்னரே எடுக்கப்பட்டது.

ரஷ்யா வெளியேற்றம்

“ஃபிஃபா அதைச் செய்யத் தவறியிருந்தால், பங்கேற்கும் பிற நாடுகளில் இருந்து ஒரு கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும்” என்று டாக்டர் அயோனிடிஸ் கூறுகிறார்.

மறுசீரமைப்பு

பின்னடைவு இருந்தபோதிலும், கத்தார் சிற்றரசர், தமிம் பின் ஹமத் அல் தானி, உலகக்கோப்பை போட்டிகளை தனது நாட்டில் நடத்துவது குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“பல தசாப்தங்களாக, மத்திய கிழக்கு பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற பாகுபாடுகள் பெரும்பாலும் மக்கள் எங்களை பற்றி அறியாதவர்கள் மற்றும் சில சமயங்களில் எங்களைப் பற்றி தெரிந்துகொள்ள மறுப்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை நான் அறிந்தேன்,” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “வெவ்வேறு கண்டங்களில் உள்ள மற்ற நாடுகளால் இதுபோன்ற ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வு நடத்தப்பட்டபோது, முன் எப்போதும் கண்டிராத வேகத்தில், தனிநபர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்” என்றும், கத்தாரின் “வளர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம் குறித்து பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டியானது கால்பந்து விளையாட்டை தவிர வேறு சில காரணங்களுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கும் என்று தெரிகிறது.

Previous Story

மலேசியா:GPS, BN, PN, GRS  இணைந்து அரசாங்கத்தை அமைக்க ஒப்புதல்

Next Story

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லியுள்ள ஆளுநர்