இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட் வீச்சு

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலைமை “விரைவாக மோசமடையக் கூடும்” என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்கப் போவதாக இரான் சபதம் செய்துள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரத்திற்குப் பிறகு ஹனியே படுகொலை நடந்தது.

இஸ்ரேல் vs இரான்

மத்திய கிழக்கில் இரான் ஆதரவுக் குழுக்களில் ஒன்றான, லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா, இரானின் அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்றும், இது இஸ்ரேலின் கடுமையான பதிலடியை தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (22:25 BST சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி சுமார் 00:25 மணியளவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் டஜன்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கும் காட்சிகளைக் காட்டுகின்றன. உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஜோர்டான் வெளியுறவு அமைச்சகமும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது, லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறும், மற்றவர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் vs இரான்

விமான சேவைகள் ரத்து

லெபனானுக்குச் செல்வதற்கு எதிரான தற்போதைய எச்சரிக்கையின் அடிப்படையில், இஸ்ரேலுக்கும் பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் “நிலைமை எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடையக் கூடும்” என்பதே தற்போதைய நிலைமை.

லெபனானில் தங்க விரும்புபவர்கள் ‘நீண்ட காலத்திற்கு தங்கும் வகையில் பாதுகாப்பான இருப்பிடத்தை’ அடையாளம் கண்டு சரியான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பதற்றம் அதிகரித்துள்ளதால் லெபனானுக்கு பல விமான நிறுவனங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சேவையைத் தொடரும் சில நிறுவனங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனாலும் “லெபனானை விட்டு வெளியேற வணிக ரீதியான போக்குவரத்து சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன” என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க, பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள்

இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப் போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

லெபனானை விட்டு தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவ கூடுதல் இராணுவ வீரர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் எல்லைப் படை அதிகாரிகளை அனுப்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. ஆனால் “வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் போதே” லெபனானை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

இரண்டு பிரிட்டிஷ் இராணுவக் கப்பல்கள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் விமானப்படையும் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

Previous Story

காசா:மக்கள் தொகையில் படுகொலை 1.7 % படுகாயம் 3.7%

Next Story

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்!