இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்!

ஈரானின் தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம்சாட்டி உள்ளது.

அதற்கு உரிய முறையில் கடுமையாக பழிதீர்க்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் எடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, ஈரான் அதிபராக பதவி வகித்து வந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் அந்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியான் அண்மையில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஈரானில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். அதற்கு முந்தைய நாள் மாலை ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட தளபதி ஃபுவாட் ஷுக்ரின் பெய்ரூட்டில் கொல்லப்பட்டார்.

தெஹ்ரானில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவலர் படை, இஸ்ரேலை பழிதீர்க்க சபதம் எடுத்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, தெஹ்ரானில் 7 கிலோ குறுகிய தூர எறிகணை மூலம் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) இன்று அறிவித்தது. மேலும், “குற்றவாளியான அமெரிக்க அரசாங்கம் இந்த தாக்குதலை ஆதரித்துள்ளதாக IRGC குற்றம்சாட்டி உள்ளது.

ஈரான் புரட்சிகர காவலர் படை சபதம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதலை தொடர்ந்து, ஈரான் கடும் கொண்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே தயாராக இருக்கும் அமெரிக்கா, தற்போது போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதியில் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இஸ்ரேல் மீது ஈரான் வீசிய பல ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் நடுவழியில் அழித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – காஸா போர் மற்றும் லெபனானில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் புரட்சிகர காவல் புடையின் பழிதீர்க்கும் எச்சரிக்கை, தெஹ்ரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

Previous Story

இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட் வீச்சு

Next Story

இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாடுகள்!