ஸ்ரீலங்கா என்ன இந்தியாவின் பகுதியா? கொதிக்கும் அமைச்சர் – நடந்தது என்ன?

இலங்கை என்ன இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா என்று கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறார் இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மனபில. என்ன நடந்தது?

தற்போதைக்கு தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக இருக்கும் இலங்கைக்கு உதவக்கூடும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலங்காலமாக பின்னிப்பிணைந்து உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னை மிகவும் உணர்வுபூர்வமானது, ஆனால், அதுவே இரு தரப்பிலும் கசப்புணர்வை தூண்டவும் காரணமாகலாம் என்ற வகையில் ஒரு நிகழ்வு இலங்கையில் நடந்திருக்கிறது.

ஜனவரி 13ஆம் தேதி இலங்கைக்கான இந்திய தூதரகம், இலங்கைக்கு 900 மில்லியன் டாலர்கள் உதவியை இந்தியா வழங்குவதாக அறிவித்தது. பிறகு இந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, இலங்கை பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.

இவை ஒருபுறமிருக்க, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அந்நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பி.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று அங்கிருந்த தூதர் கோபால் போகலேவிடம் மோதிக்கு எழுதிய கடிதத்தை நேரிலும் வழங்கினர்.

ஏழு பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்களின் தமிழர் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுமாறும் எம்.பிக்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் சி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அ. அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை கட்சியின் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் க. பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் ந. சிறிகாந்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் எம்.பிக்கள் குழு கொழும்பில் இந்திய தூதரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட சில படங்களை இந்திய தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 18ஆம் தேதி இரவு வெளியிட்டது.

இந்தப் படங்களுடன் இந்திய தூதரை, “இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தலைவர்கள் குழுவொன்று சந்தித்து பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதத்தை சமர்ப்பித்துள்ளது” என்று மட்டும் இடுகையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது என்ன கடிதம், எம்.பி.க்கள் என்ன கோரிக்கை விடுத்தனர் போன்ற தகவல் ட்விட்டர் இடுகையில் இடம்பெறவில்லை.

ஸ்ரீலங்கா இந்தியாவின் பகுதி அல்ல

இந்த நிலையில், தங்களுடைய குடிமக்களான தமிழ் எம்.பி.க்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தகவலை அறிந்ததும் அதற்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்ப வேண்டிய இடம் இந்திய பிரதமரிடம் அல்ல, இலங்கையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் எழுப்ப வேண்டும் என அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் உள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மனபில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இறையாண்மையுள்ள நாடு. அது இந்தியாவின் பகுதி அல்ல என்று அவர் கடுமையாக சாடினார்.

இந்த கருத்தை தமது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட உதய கம்மனபில, “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாதது பற்றி தமிழ்க் கட்சிகள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதை வெளிப்படுத்த மற்றும் செல்ல வேண்டிய இடம் இலங்கை அதிபரிடம்தான். இந்தியப் பிரதமரிடம் அல்ல என்று கூறினார்.

இந்த கோரிக்கையை தமிழ் சகோதரர்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்பே வைக்க வேண்டும்.

தமிழர்களின் கடிதம் தொடர்பாக எழுப்பப்பட்ட ஆட்சேபனை தொடர்பான கொழும்பு கெஜட் என்ற இணையதளத்தில் வெளிவந்த செய்தியை அமைச்சர் உதயா மறு ட்வீட் செய்துள்ளார்.

அவரது கருத்தையே அந்த இணையதளம் பிரதான தலைப்பாக வைத்துள்ளது.

இந்த செய்தியின் தலைப்பு – தமிழ் எம்.பி.க்களுக்கு உதயா நினைவூட்டுகிறார்: இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தமிழ் எம்.பிக்கள் மோதிக்கு என்ன எழுதியுள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அதில், 2015ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி ஆற்றிய உரையின்போது, பிரதமர் மோதி இலங்கையில் கூட்டாட்சி (கூட்டுறவு கூட்டாட்சி) பற்றி பேசியதை நினைவுகூர்ந்த எம்.பி.க்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் எப்போதும் பெரும்பான்மையாக உள்ளனர்.

தமிழர்களைப் பொருத்தவரை, கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

13வது திருத்தம் ?

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அங்கு வாழும் தமிழர் பிரச்னை மிக முக்கியமானது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு சென்றபோது அவரிடம் இலங்கை தமிழ் எம்.பிக்கள் தமிழர்கள் பிரச்னை குறித்து பேசினர்.

இலங்கை தனது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை பின்பற்ற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. 1987ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஆக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் அதன் அதிகாரத்தில் சம உரிமை மற்றும் பங்கு தர வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மோதலை நிறுத்துவதே இதன் நோக்கமாகும். 13வது திருத்தத்தின் மூலமாக மாகாண சபையொன்றை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பிலும் அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

இதில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீடு, நிலம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமையை மாகாண சபைக்கு வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பலவற்றை செயல்படுத்த முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் கொள்கை அளவில் தாங்களாகவே முடிவெடுக்கும் உரிமையைப் பெறும் வகையில் இலங்கை இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை அரசாங்கம் உளப்பூர்வமாக நிறைவேற்றுமா என இந்தியா சந்தேகம் கொண்டுள்ளது.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க தூதரகத்தின் தகவல்களை கசியவிட்ட விக்கிலீக்ஸ் தரவுகளை தி இந்து நாளிதழ் வெளியிட்டடது. அந்த திருத்தத்தின்படி செயல்பட இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா தீவிரமாகச் செயல்பட்டதாகவும், ஆனால் இலங்கை அதற்கு தயாராக இல்லை என்பது அந்த விக்கிலீக்ஸ் கசிய விட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது.

இதேவேளை, இந்தியாவுக்கோ இலங்கையில் அதிகரித்து வரும் சீன செல்வாக்கிற்கு மத்தியில் ‘தமிழர் பிரச்னை’ முன்னுரிமையை இழக்கிறது.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் அனைத்து விதிகளையும் இலங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதிகார பகிர்வு மற்றும் விரைவில் மாகாண சபை தேர்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இலங்கையில் 34 ஆண்டுகள் பழமையான சட்டம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில், இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அதற்கேற்ப பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

 

 

Previous Story

MPமர்ஜான் பலீலுக்கு நன்றிகள்

Next Story

செயற்கை சந்திரன்! உலகை திரும்பிப் பார்க்கவைக்கும் சீனா