வாராந்த அரசியல் 23.06.2024

-நஜீப்-

1
தயா டலஸ் லன்சா சஜித்துடன்!

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிரி ரணிலுடன் ஜனாதிபதித் தேர்தலி போட்டியிட்ட டலஸ் அலகப்பெரும ராஜபக்ஸாக்களுக்கு எதிராக கூட்டணியை உருவாக்கிய நிமல் லன்சா ஆகியோர் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகின்றது.

இவர்கள் சொல்கின்ற படி சஜித்துடன் இணைவார்களானால் அது சஜித்தக்கு நல்ல உந்து சக்தியைக் கொடுக்கலாம். ஆனால் புதிதாக அங்கு போய் இணைபவர்களுக்கு மாற்றாந்தாய் கவணிப்பு நடப்பதால் இந்த மூன்று பேரும் வருவார்களானால் அவர்களுக்குக் கொடுக்கின்ற இடம் பதவிகள் கௌரவம் என்பன பற்றி முன்கூட்டியே தீர்க்கமான வாக்குறுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அந்த இணக்கப்பாடுகளுக்கு தலைவர் சஜித் பச்சைக் கொடி காட்டி இருக்கின்றார் என்றும் தெரிய வருகின்றது. அதே நேரம் சஜித் அணியில் இருந்து பலர் ரணிலுடனும் ரணில் அணியில் இருந்தும் மொட்டு அணியில் இருந்து பலரும் மாறிமாறி கட்சி தாவ இருக்கின்றார்கள் என்றும் மற்றுமொரு தகவல்கள் வருகின்றது.

2
பொன்சேக்காவும் வேட்பாளராக!

சஜித்தின் ஐமச.யில் தேசிய அமைப்பாளராக இருந்த பீல்ட் மார்ஷல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சஜித் அணியில் தனக்குப் பேச இடம் தருவதில்லை என்று ஆளும் தரப்பு நேரத்தில் அங்கு பேசினார். அவரது இந்த செயலை முஜீபர் விமர்சித்திருந்தார்.

அந்தக் கதைகள் அப்படி இருக்க இப்போது புதிய தகவலாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க காலிமுகத் திடல் போராட்டக்காரர்களின் வேட்பாளராக களத்துக்கு வருகின்றார் என்பது உறுதியாகி இருக்கின்றது.

இந்தக் கூட்டணியில் குமார் குனரத்தினத்தின் முன்னிலை சோஸலிச கட்சி, காலிமுகத்திடல் போராட்டக்கார்கள், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் வசந்த முதலிகே செல்வாக்கான ஊடகவியலாளர் லஹிரு போன்றவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஐஎம்எப். மற்றும் இந்திய விரோத கோஷங்களுடன் களம் இறங்குகின்றார்கள்.

3
பாம்புக் கூட்டம் படுதோல்வி!

பெரும் தடால் புடலாக மஹரகம ஆனந்த சமரக்கோன் அரங்கில் நடைபெற்ற திலித் ஜயவீரவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் படு தோல்வியில் முடிந்ததால் சமூக ஊடகங்கள் அவர்களை நையாண்டி செய்கின்றது. இந்தக் கூட்டணியில் விமல், கம்மன்பில, சன்ன ஜயசுமன போன்ற இனவாதிகள் இணைந்தனர். இவர்கள் வரவால் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த சரத் அமுனுகம வெளியேறிவிட்டார்.

இந்த கூட்டணிக்கு பாம்புக் கூட்டணி என்றும் ஒரு பெயர் இருக்கின்றது. காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெருவில் போன பம்பை பிடித்து அதற்கு கடவுள் அவதாரம் கொடுத்து பௌத்தத்துக்கே தலைகுனிவை கொடுக்க திலித் முக்கிய காரணமாக இருந்தார். அ

வரது தொலைக் காட்சிதான் இந்த நாடகத்தை சந்தைப் படுத்தியது. இன்று இதற்கு திலித் மன்னிப்புக் கோருகின்றார். அதனால்தான் இதற்கு பாம்புக் கூட்டணி என்ற பெயர். ஒரு இலட்சம் பேர் வரை எதிர் பார்த்தார்கள். பத்தாயிரம் பேர் வரைதான் அங்கு இருந்தனர். காசு கொடுத்து ஆட்களை கூப்பிட்டாலும் அதற்கும் கூட சனம் வரவில்லையாம்.

4

டிரான் அலஸ் ஒரு உளவாளி!

ஒரு செய்திக் குறிப்பில் இப்படி ஒரு செய்தியை நமக்குப் பார்க்க முடிந்தது. நான் ஒரு வைபவத்தில் பேசும் போது பெயரொன்றை தவறாக உச்சரித்து விட்டோன். அந்நிகழ்வில் ஜனாதிபதி ரணிலும் இருந்தார். கூட்டம் முடிய அவர் என்னையும் சப்பாடுக்கு அழைத்தார்.

நானும் அங்கு சென்றேன். அப்போது நீங்கள் கூட்டத்தில் ஒரு பெயரை தவறாக அங்கு உச்சரித்தீர்கள். அது சரத் வீரசேக்கர அல்ல. அது டிரான் அலஸ் என என்னிடம் சுட்டிக் காட்டினார் ஜனாதிபதி. அது உண்மை. விமலுடன் வெளியேற போன டிரானை பின்னர் உளவுப் பணிக்காக அவர்கள் இங்கு அனுப்பி வைத்திருன்றார்கள் என்று ரணில் தன்னிடம் கூறினார் என்றார் சுமந்திரன்.

ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் மிக நெருக்க உறவுகள் இருந்து வருகின்றது. இனப்பிரச்சினைகள் தீர்வு விடயத்தில் ரணில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தாலும். இன்றும் அவருக்கு ஜனாதிபதி ரணில் மீது ஒரு விசுவாசம் இருக்கின்றது.

5
ரணிலை ஏமாற்றும் திட்டம்!

அபிவிருத்தித் திட்டங்களுக்கு கோடி கோடியாய் ஜனாதிபதி ரணிலிடம் காசு வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் ரணிலுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கின்றார்கள் என்று கிழக்கில் பரவலான கதைகள்.

மக்கள் உணர்வுகள் ரணிலுக்கு ஆதரவாக இல்லை என்பதால் இவர்கள் பல்டிக்கு முன் கூட்டி தயாராக இருக்கின்றார்கள். இதற்கு முன்னர் 2015ல் மைத்திரியை ஆதரிக்கின்ற விடயத்தில் மு.கா. தலைவர் மாற்றுக் கருத்துடன் அதாவது மஹிந்தவுக்கு ஆதரவாக கடைசி வரை இருந்து விட்டு மக்கள் உணர்வை கண்டு கடைசி நேரத்தில் மைத்திரி அணிக்கு தாவியது போல ஒரு அரசியல் விளையாட்டுத்தான் இந்த ரணிலிடம் காசு பெற்றவர்கள் நிலமையும் இருக்கின்றது.

எனவே காசு கொடுத்து விட்டு ஏமாந்த ஒரு நிலை ரணிலுக்கு வருமோ தெரியாது. ஹக்கீம், ரிஷhட் அணியில் அனைவரும் போல இந்த காசு வாங்கி இருக்கின்றார்கள். மலையகத்திலும் அப்படித்தான் நிலமை.

Previous Story

புர்ஜ் கலீஃபாவில் விளம்பர கட்டணம்?

Next Story

பாலியல் பொம்மைகள்.."