பொது வேட்பாளர் வரவு தெற்கில் அதிர்ச்சியும் கலக்கமும்!

-நஜீப் பின் கபூர்-

News on AIR

நீதி மன்றம் ஒரு குற்றவாளியாக உறுதி செய்து அதற்கு ஒரு இலட்சம் ரூபாய்களை தண்டாப் பணம் செலுத்திய ஒரு குற்றவாளியை ஜனாதிபதி ரணில் தனக்குள்ள அதிகாரத்தை வைத்து பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமனம் செய்திருந்தார். அந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதி மன்றம் ஏகமனதாக சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கி இருந்தது.

Sri Lanka’s Tamils vote after decades of war

அந்தத் தீர்பைக் கூட ஏற்க மனம் இல்லாத ஒரு நிலையில் ஆட்சியாளர்கள் இன்றும் பேசிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் வருகின்ற இந்த நாட்களில் தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்தமானி அறிவித்தலை 19.07.2024 இன்று வெளியிடுகின்றது. தனக்கு அந்த அறிவிப்பு கிடைத்திருக்கின்றது என அச்சக தலைவர் கங்கானி லியனகே உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இன்னும் சில மணி நேரத்தில் அது வெளி வருகின்றது. எனவே ஜனாதிபதித் தேர்தல் உறுதிதான் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் தேர்தலுக்கு அஞ்சுகின்ற இந்த ஆட்சியாளர்களின் வன்முறைகள் முற்றுப் பெற்று விடும் என்று எவரும் எதிர்பார்க்க கூடாது. அது என்ன உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம்.

மாற்று வாழிகளில் அவர்களின் அடாவடித்தனம் வன்முறைகள் வன்மமான செயல்பாடுகள் இறுதிவரை தொடரலாம் என்ற ஒரு நிலைதான் நாட்டில் அப்போதும் இருந்து வருகின்றது என்பதனை குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணில் பதவிக்காலம் தொடர்பான குழறுபடிகளை நாடாளுமன்றத்தை வைத்து மேலும் உசுப்பேற்றுகின்ற ஒரு வேலையிலும் அவர் இறங்க இன்னமும் இடமிருக்கின்றது.

Black day for Tamil homeland!' - Tamils in Jaffna protest Sri Lanka's Independence Day celebrations | Tamil Guardian

இவை எப்படிப் போனாலும் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் தமது தரப்பில் இருந்து பொது வேட்பாளர் வருவதை உறுதி செய்திருக்கின்றார்கள். அதற்கான ஒப்பந்தங்களும் நடந்து முடிந்திருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு இருக்கமான முடிவை இதற்கு முன்னர் தமிழர்கள் ஒன்று பட்டு எடுத்ததில்லை.

இதிலும் சில கோடாறிக் காம்புகள் தமது ஆதிக்கத்தை காட்ட இன்னும் முயன்று வருகின்றார்கள். கொழும்பை பகைத்துக் கொண்டு அரசியல் செய்வதை அவர்கள் ஒரு வன்முறை பிடிவாதம் அடங்காத செயல் என்றெல்லாம் இதற்கு அவர்கள் முத்திரை குத்தவும் இடமிருக்கின்றது.

நெருக்க உறவில் அல்லது ஒட்டி உறவாடி இதுவரை இவர்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது என்ன என்று நாம் கேட்கின்றோம். மக்களையும் தம்மையும் ஏமாற்றிக் கொண்டு கொழும்பை அவர்கள் திருப்திப்படுத்தியது ஒன்றுதான் அவர்கள் செய்த அரசியல். தமிழர்களின் மிகப் பெரிய அரசியல் இயக்கம் முதிர்ந்த கட்சி என்றெல்லாம் தன்னை அழைத்துக் கொள்கின்ற தமிழரசுக் கட்சி இதுவரை இந்த கூட்டுக்ககுள் வராவிட்டாலும் அதன் தலைவராக அண்மையில் தெரிவான சிரிதரன் இந்த பொது வேட்பாளர் தீர்மானத்துக்குத் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பொதுவாகப் பார்க்கின்ற போது பெரும்பாலான தமிழர் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இது விடயத்தில் ஒரு பக்கத்தில் இருப்பதாகத்தான் தெரிகின்றது.

 

வாக்குச் சாவடிக்குப் போய் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் நமக்கு இன்றும் இருக்கின்றது. எனவேதான் பொதுத் வேட்பாளர் என்பதனைவிடவும் பகிஸ்கரிப்பு என்பதுதான் பாதுகாப்பான எதிர்ப்பின் குறீயீடாக இருக்கும் என்று நாம் முன்பு சொல்லி இருந்தோம். எமது இந்தக் கருத்துப்படி பொது வேட்பாளர் என்பது நமது இரண்டாவது தெரிவாகத்தான் இருந்தது. என்றாலும் பொது வேட்பாளர் விவகாரத்தில் இந்தளவுக்கு அதில் ஒரு ஐக்கியம் ஏற்பட்டிருப்தை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்கு தெற்கு அரசியல்வாதிகளும் அவர்களின் வடக்கு கிழக்கு முகவர்களும் நிறையவே எட்டப்பர் வேலைகளை செய்ய அதிக வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன.

Protests in Kilinochchi calling for release of all Tamil political prisoners in Sri Lanka | Tamil Guardian

எனவே தற்போது ஓராணியில் இணைந்திருக்கின்ற அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் சிறப்பான கவர்ச்சிகரமான ஒரு பிரச்சார உத்தியை பொது வேட்பாளருக்கான பிரச்சாரத்துக்காக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். சின்னச் சின்ன ஈகோ பிரச்சினைகளை பெரிதுபடுத்தி தமக்குள் முட்டி மோதிக் கொள்வதை இவர்கள் முற்றாகத் தடுத்துக் கொள்ள வேண்டும். நொண்டிக் காரணங்களைச் சொல்லி பொது உடன்பாட்டுக்கு வந்திருப்பவர்களும் .டையில் விலகிப் போக இடமிருக்கின்றது. இது விடயத்தில் பணம் சலுகைகள் செல்வாக்குச் செலுத்த இடமிருக்கின்றது.

இந்த பொது வேட்பாளர் என்பது தமிழினத்தில் ஐக்கியத்துக்கும் தியாகங்களுக்கும் உணர்வுகளுக்குமான குறியீடாகவே தமிழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாக்குகள் கூட இந்த பொது வேட்பாளருக்குக் கிடைக்குமாக இருந்தால் அதன் அளவு எண்ணிக்கையைப் பொறுத்த தெற்குக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு சிறப்பான செய்தியை தமிழ் சமூகத்தினர் கொடுக்கலாம். இந்த இடத்தில் வடக்குப் பொது வேட்பாளர் களமிறங்குவது தொடர்பாக மலையகத் தமிழ் தலைமைகள் மென் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்திருக்கின்ற கருத்தும் பாராட்டத்தக்கது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த பொது வேட்பாளர் தொடர்பான இணக்கப்பாடுகள் தீர்மானங்கள் எந்தளவுக்கு இறுதிவரை கடைப்பிடிக்கப்படும் என்ற விடயத்தில் எமக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இந்திய கடைசி நேரத்தில் ஏதாவது நியாயங்களைச் சொல்லி இதற்கு ஆப்பு வைத்துவிட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. தெற்கு அரசியல் தலைமைகள் கொடுக்கின்ற அழுத்தங்களினால் அல்லது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பு வெருப்புக்களுக்காகவும் இது நடக்கலாம்.

Pro-LTTE Group Crashes Event Attended By TNA MPs Sumanthiran And Shanakyan In Toronto - Colombo Telegraph

வரலாற்றில் ஒரு முறையாவது இப்படியான ஒரு முடிவுக்கு தமிழர்கள் வந்திருப்பது நல்ல செய்தி. இந்த பொது வேட்பாளர் என்று செய்தி தெற்கு அரசியலில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நமது கணிப்புகளின் படி இந்த 2024 ஜனாதிபதித் தேர்தல் ஒரு இருக்கமான தேர்தலாகத்தான் இருக்கப் போகின்றது. அவர்கள் எந்தளவுக்கு இதில் ஐக்கியமாகச் செயலாற்றுக்கின்றார்களே அந்தளவுக்கு இந்த தேர்தலில் தமிழர்கள் தமது கவனத்தை தெற்கிற்கும் சர்வதேசத்துக்கும் காட்சிப்படுத்த முடியும் என்றும் நாம் நம்புகின்றறோம்.

அடுத்து வருகின்ற பொது வேட்பாளர் ஆளுமையும் கவர்ச்சியும் தமிழினத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருப்பதும் முக்கியமானது. மேலும் நாம் சொல்கின்ற தகைமையுடைய ஒரு மனிதன் தமிழர் தரப்பில் இன்று இருக்கின்றாரோ இல்லையோ என்பதும் ஒரு கேள்விதான். இந்த நிலையில் அவர் யாராக இருந்தாலும் களத்தில் இறக்கிவிடப்பட்டு விட்டால் அவரை ஊதிப் பெருப்பித்தாவது தமிழர்கள் தமது இலக்கை இந்தத் தேர்தலில் அடைந்தே ஆக வேண்டும்.

இதுவும் இனத்துக்கும் நியாயத்துக்குமான ஒரு போராட்டம்தான். பொது வேட்பாளராக களமிறக்கப்படுகின்ற மனிதன் யாராக இருந்தாலும் அவர் சிங்கள மக்கள் மத்தியில் தமது தரப்பு நியாயங்களை இனவாதக் கண்ணோட்டத்துக்கு அப்பால் நின்று முன்வைக்க வேண்டும். இதற்கான பிரச்சார வேலைத்திட்டங்களையும் பொது வேட்பாளர் தரப்பினர் சிந்திக்க வேண்டும்.

வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமது சகோதர முஸ்லிம்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்தவராக இந்த பொது வேட்பாளர் தனது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். முன்னாள் மு.கா. செயலாளா ஹசனலி கூட இந்த பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஒருமுறை கருத்துச் சொல்லி இருந்ததாக நமக்கு ஒரு நினைவு இருக்கின்றது. அப்படிப்பட்டவர்களைக் கூட முடியுமானால் பொது வேட்பாளர் பரப்புரைக்கு உபயோகித்துக் கொள்ள முடியுமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். இந்தப் பொது வேட்பாளர் அணியில் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ என்பது நமக்குத் தெரியாது.

மேலும் வடக்கு கிழக்கு மாகாண சபையில் சிங்களவர்கள் கூட அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள் அப்படிப்பட்டவர்களின் உதவியையும் இதற்கு பெற்றுக் கொள்ள முடியாதா என்று நாம் சிந்தனைக்கான ஒரு கருத்தை இங்கு முன்வைக்கின்றறோம். வடக்குக் கிழக்கில் சிங்கள சமூகத்தினரும் குறிப்பிட்ட ஒரு தொகையினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மிகவும் கீழ் மட்ட வாழ்கையை நடத்துகின்ற ஒரு கூட்டத்தினர் என்பதும் இந்த பொது வேட்பாளர் தெரிந்து கொள்ள வேண்டும்.

New ITAK leader vows to fight for Tamils' rights

நமது கருத்துக்களும் கற்பனைகளும் சற்று வரம்பு மீறியதாக நடைமுறைச் சாத்தியமற்றவை என்று சில வேலைகளின் பார்க்கப்படலாம். என்றாலும் நமது பார்வையில் இது சிறப்பாக இருக்கும் என்ற ஒரு கணக்கு இருக்கின்றது. இது போன்று சிரிதும் பெரிதுமான நிறைய விடங்களை இந்த பொது வேட்பாளர் விடயத்தில் பரீட்சித்துப் பார்க்கலாம் என்பது நமது சிறியதோர் ஆலோசைனையாகும்.

ஜனாதிபதி வேட்பாளருக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலாகும் முன்னர் நாம் குறிப்பிடுகின்ற இந்த சிங்கள முஸ்லிம் தரப்பினருடன் ஒரு இணக்கப்பட்டுக்கு பொது வேட்பாளர் தரப்பினர் வர முடியுமாக இருந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கு முன்பும் சில தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தல்களின் போட்டியிட்டிருந்தாலும் இந்த முறை வருகின்ற பொது வேட்பாளர் சற்று வீரியம் மிக்கவராக இருப்பார்-இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கள் தமிழர்களிடம் இருந்து வருகின்றன.

இதற்கு முன்பு தமிழர்கள் வேட்பாளர்களாக வந்த போது அதனை இலங்கை அரசியல் களமே சர்வதேசமோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை வருகின்ற பொது வேட்பாளர் விடயத்தில் ஒரு நல்ல எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தமிழர்களிடம் இருந்து வருகின்றது. இதைக்கூட தமிழர் தரப்பில் ஒரு வெற்றியாக எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த பொது வேட்பளாரை முன்னிருத்துகின்றவர்களில் சிலர் தமது இரண்டாம் முன்றாம் விருப்பு வாக்குத் தெரிவுகளை தெற்கு அரசியல்வாதிகளுக்கு வழங்குவது தொடர்பாக சில இடங்களில் உச்சரித்திருந்தனை நாம் பார்க்க முடிந்தது. இந்தக் கருத்து முற்றிலும் பிழையான நிலைப்பாடும் முட்டல்தனமானதுமான ஒரு கருத்து. ஒரு குறிக்கோளை மையமாக வைத்து முன்னெடுக்கின்ற உன்னத நோக்கத்துக்கும் இது முரணாது. ஒரு பானைப் பாலில் ஒரு துளி விஷம் கலக்கின்ற ஒரு வேலைபோலத்தான் இந்தக் கருத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான ஒரு இலக்கில் கலங்கத்தை உண்டு பண்ணும் ஒரு விசக் கருத்துத்தான் இந்த இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் என்பதும் எமது கருத்து.

Battle for Sri Lankan Tamil leadership - NewsIn.Asia

பொது வேட்பாளருக்கு தமிழ் இனத்துக்குள்ளே வருகின்ற எதிர் பிரச்சாரங்களுக்கும் தெற்கில் இருந்து வருகின்ற விமர்சனங்களுக்கும் எப்படியான பதில்களைக் கொடுப்பது என்பதனையும் பொது வேட்பாளர் தரப்பினர் தம்மை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற ஒரு தரப்பும் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றது. எனவே அவர்களை தமது கூட்டணிக்குள் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் மிகவும் இன்றியமையாதவை.

இப்போது இந்த தமிழ் வேட்பாளர் தொடர்பாக தெற்கு உணர்கள் எப்படி இருக்கின்ற என்று பார்ப்போம். எடுத்த எடுப்பிலே தெற்கு அரசியல், தமிழர்களின் இந்த முடிவால் அதிர்ந்து கலங்கிப் போய் இருக்கின்றது. இதுவரை நாம் தமிழர்களுக்கு என்னதான் அநீயாயங்களைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் ஜனாதிபத் தேர்தல் என்று வந்து விட்டால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமக்குக் தான் வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவால் தெற்கு அரசியலில் அது மிகப் பெரிய தாக்கங்களை எற்படுத்தப் போகின்றது என்பதனை அவர்கள் நன்றாகப் புரிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.

அதனால் தமிழர்களிடத்தில் மண்றாடுகின்ற ஒரு நிலைக்கு இப்போது அவர்கள் வந்திருக்கின்றார்கள். இந்தியாவுக்கு அழுத்தங்களைக் கொடுத்து தமிழர்களுக்கு அதனைத் தருகின்றோம் இதனைத் தருகின்றோம் இதன் பின்னர் நாம் தமிழர்களுக்கு எந்த அநீயாயங்களையும் செய்ய மாட்டோம் என்றெல்லாம் இந்தியா ஊடாக ஒரு இணக்கப்பட்டுக்கு பேரின வேட்பாளர்கள் வர இடமிருக்கின்றது. அவர்களின் இப்படியான முயற்சிகளுக்கு தமிழர்கள் இந்தமுறை ஏமாந்து விடக் கூடாது.

என்பிபி. மீதுதான அச்சம் காரணமாக இந்த அனுகுமுறைக்கும் இடமிருக்கின்றது. என்பிபி. அதிகாரத்துக்கு வந்தால் அவர்கள் சீனாவுடன் நெருகிப் போவார்கள் என்ற ஒரு பயம் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இதனை நாம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றோம்.

பொது வேட்பாளர் வரவால் மிகவும் அதிர்ச்சிக்கு இலக்காகி இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித்தும் அவருக்கு ஆதரவாக இருக்கின்ற குழுக்களுமே ஆகும். அடுத்து இது விடயத்தில் ரணில் தரப்பினருக்கும் ஒரு கவலை இருக்கின்றது. அவர்களும் தமிழர்களின் ஆதரவு தமக்குத்தான் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். ரணில் ஒரு பொது வேட்பாளராக வந்தால்? அந்த எதிர்பார்ப்பில் ஒரு சின்ன உண்மையும் இருந்தது. ஆனால் தமிழர்களில் பெரும்பான்மையினர் சஜித்துக்குத்தான் ஆதரவாக இருந்திருப்பார்கள் என்பது கள நிலவரமாக இருந்தது என்று நாம் நம்புகின்றோம்.

தமிழ் தரப்பினரின் இந்த பொது வேட்பாளர் முடிவால் அதிக நன்மைகளைப் பெரும் தரப்பாக இருக்கப்போவது தேசிய மக்கள் சக்தி என்ற என்பிபி. வேட்பாளர் அணுர தரப்பினர் தான் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழர்களின் பல இலட்சம் வாக்குகள் சஜித் தரப்பினர் இழப்பதால் அணுர ஜனாதிபதித் தேர்தலில் முதலிடம் என்பது மேலும் உறுதியாகின்றது.

இதனால் தமிழர் பொது வேட்பாளர் தரப்பினருக்கு ஜனாதிபத் தேர்தலில் அணுர வெற்றி பெறுவாராக இருந்தால் சிறப்பான ஒரு நல்லுறவுக்கு அது வாய்ப்பாகவும் அமையக் கூடும். எனவே தமிழர்களின் இந்த முடிவால் தெற்கில் சிலருக்கு அதிர்ச்சியும் சிலருக்கு கலக்கமும் மற்றுமொரு தரப்பினருக்கு மகிழ்ச்சியும் என்று நாம் இதனை பார்க்க முடியும்.

நன்றி: 28.07.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முஸ்லிம் திருமணம், விவாகரத்து  சட்டம் ரத்தாகிறது

Next Story

வாராந்த அரசியல் 28.07.2024