நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை எனவும், சிறைச்சாலை வைத்தியசாலையினால் பொய்யான மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான விசாரணைகளின் பிரகாரம், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய | Keheliya Tried To Cheat The Court

அதனையடுத்து. பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹெலியவை, பெப்ரவரி 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் சுகவீனமடைந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி 14 அன்று கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை.

நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத கடுமையான நோயினால் கெஹெலிய பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நேரம், கெஹெலிய ரம்புக்வெல்ல இரவு நேரங்களில் சுவாசிப்பதற்கே சிரமப்பமடுவதாகவும், செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கும் மேலதிகமாக பல்வேறு கடுமையாக வியாதிகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கெஹெலியவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அம்பலமான தகவல்

கெஹெலியவின் நோய்கள் தொடர்பில் சிகிச்சை அளிப்பதற்குப் போதுமான வசதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயவும், அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து ஆராயவும் நீதிமன்ற உத்தரவின் பேரில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய | Keheliya Tried To Cheat The Court

தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்பது நிபுணர்குழுவின் அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கெஹெலியவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதே ​நேரம் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அதனையடுத்து நீதிமன்றத்தில் போலி மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம கோரிக்கை விடுத்த போதும், நீதிமன்றம் அதற்கு இணங்கவில்லை.

சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர்களால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ அறிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதவான் லோசனா அபேவிக்கிரம அறிவுறுத்தியுள்ளார்.

Previous Story

பூவோடு சேர்ந்த நார்.!

Next Story

2024 அதிரடி பொதுத் தேர்தல்!