கடனாக டிக்கெட் வாங்கி சீனா சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி

-ஆசியா அன்ஸார்-

பாகிஸ்தான் ஹாக்கி அணி
பாகிஸ்தானின் ஹாக்கி அணி ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த அணியாக இருந்தது

ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணி, வெளிநாட்டில் ஒரு போட்டியில் கலந்துகொள்ளச் செல்வதற்கான செலவு மற்றும் டிக்கெட்டுகளுக்கு கடன் வாங்கும் நிலைமையில் இருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி. பாகிஸ்தானின் தேசிய ஹாக்கி அணியின் வீரர்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் கலந்துகொள்ள சீனாவிற்குச் சென்றிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் பாகிஸ்தானின் தேசிய விளையாட்டான ஹாக்கி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தது. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் படித்தபோது அது பற்றிய தகவல்கள் பெற பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தாரிக் ஹுசைன் புக்டியைத் தொடர்பு கொண்டோம்.

Financial Calamity! Pakistan's Hockey Team Reaches China On 'Loaned Air Tickets' To Play Asian Champions Trophy 2024

சீனாவில் நடைபெறவுள்ள ‘ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி’யில் கலந்துகொள்ளச் சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, சீன விமான நிறுவனத்திடம் இருந்து டிக்கெட்டை கடனாகப் பெற்று புறப்பட்டுச் சென்றிருப்பதை உறுதி செய்தார் தாரிக் ஹுசைன் புக்டி. மேலும், வெளிநாடு செல்வதற்கு அணியிடம் பணம் இல்லாதது, பின்னர் அத்தொகை திருப்பிச் செலுத்தப்படுவது, இது முதல் முறை அல்ல என்றும் கூறினார்.

மறுபுறம், விசா கட்டணம், வீரர்களின் தங்குமிடம், மற்றும் பயணச் செலவுகளுக்குத் தேவையான தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முடிந்தவுடன் அது வழங்கப்படும் என்றும் பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் கூறுகிறது.

பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது? இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

அதைப் பற்றிப் பிறகு பேசுவோம். ஆனால், கடனாக வாங்கிய டிக்கெட்டில் பயணம் செய்தது ஏன் என்பதை இப்போது சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

“பாகிஸ்தான் ஹாக்கி அணி, ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் பங்கேற்கக் கடன் வாங்கிய டிக்கெட்டில் சீனாவுக்குப் புறப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்த அணிக்காக அரசு மட்டத்திலும் பங்குதாரர்கள் சார்பாகவும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன,” என்று சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கு பங்கேற்க ஹாக்கி அணி புறப்பட்டது குறித்து பிடிவி விளையாட்டுத் தொகுப்பாளர் ரோஹா நதீம் சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

மே மாதம் அஸ்லான் ஷா கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஜப்பானுடன் மோதியது. அப்போது பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

பாகிஸ்தான் கடைசியாக 2003-ஆம் ஆண்டு அஸ்லான் ஷா கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி ஜெர்மனியை வீழ்த்தியது. 2011-ஆம் ஆண்டு நடந்த அஸ்லான் ஷா கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 2022-இல் அஸ்லான் ஷா கோப்பையில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

‘இப்படி நடப்பது முதல் முறை அல்ல’

“எங்கள் அணியின் போட்டிகள் சீனாவில் செப்டம்பர் 8 முதல் 17 வரை நடைபெற உள்ளன. அணி அங்கு சென்று சில போட்டிகளில் விளையாடி, அங்குள்ள சூழ்நிலைக்கு பழக்கப்படுத்திக்கொண்டு போட்டிக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அணியை முன்கூட்டியே அனுப்பியதன் நோக்கம்,” என்று பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தாரிக் ஹுசைன் புக்டி பிபிசியிடம் கூறினார்.

“நாங்கள் அரசிடம் கேட்டபோது அதிபர் மாளிகையிலிருந்து எங்களுக்குச் சாதகமான பதில் கிடைத்தது. ஆனால் நிர்வாகத்துறையில் சில தடைகள் இருப்பதாகத்தெரிந்தது. சரியான நேரத்தில் விஷயங்கள் நடைபெறவில்லை,” என்றார் அவர்.

“நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடம் விஷயங்களை விளக்கினோம். பின்னர் பயிற்சிப் போட்டிகளுக்கான முகாமை அமைத்தோம்,” என்று தாரிக் ஹுசைன் புக்டி குறிப்பிட்டார்.

தாரிக் ஹுசைன் புக்டி

ஹாக்கி கூட்டமைப்புக்கு சொந்த மைதானம் கூட இல்லை என்று தாரிக் ஹுசைன் புக்டி கூறினார்

“எங்கள் அட்டவணையின்படி வீரர்கள் புறப்படவேண்டிய நேரம் நெருங்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ‘மன்னிக்கவும், உங்கள் தரப்பில் ஏற்பாடு செய்து வீரர்களை அனுப்புங்கள். 10 முதல் 15 நாட்களில் பணத்தைத் தருகிறோம்’ என்று எங்களிடம் கூறப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

இதுபோல நடப்பது இது முதல்முறை அல்ல என்றும் இது பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்தின் பழைய அணுகுமுறை என்றும் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் கூறினார்.

“இது நாட்டின் ‘தேசிய விளையாட்டு’. இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படாவிட்டால் முன்னேற முடியாது. ஹாக்கி கூட்டமைப்புக்குச் சொந்த மைதானம் கூட இல்லை. வீரர்கள் விளையாட வேண்டியிருக்கும் போது நாங்கள் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திற்குக் கடிதம் எழுதுகிறோம்,” என்று தாரிக் ஹுசைன் புக்டி கூறினார்.

‘ஒப்புதல் வந்தவுடன் பணம் அளிக்கப்படும்’

மறுபுறம், சாம்பியன்ஸ் டிராஃபிக்கு அணியை அனுப்புவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் வந்தவுடன் பணம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் விளையாட்டு வாரிய அதிகாரி முகமது ஷாஹித் பிபிசியிடம் தெரிவித்தார்.

“அந்த வீரர்களின் பயணச் செலவுக்கான பட்ஜெட் சுமார் 2.5 கோடி பாகிஸ்தான் ரூபாய் ஆகும். இதில் அவர்களின் விமான டிக்கெட்டுகள், விசா கட்டணம் மற்றும் தினசரி செலவுகள் அடங்கும்,” என்றார் அவர்.

ரோம் ஒலிம்பிக்கில் முதலாவது ஹாக்கி தங்கப் பதக்கத்தை பாகிஸ்தான் வென்றது

ரோம் ஒலிம்பிக்கில் முதலாவது ஹாக்கி தங்கப் பதக்கத்தை பாகிஸ்தான் வென்றது

ஜூன் மாதம் ஹாக்கி கூட்டமைப்புக்கு 10 கோடி பாகிஸ்தான் ரூபாய் மானியம் வழங்கும் அறிவிப்பு வெளியானது. அதிலிருந்து தற்போது வீரர்களின் பயணச் செலவுக்கான தொகை செலவிடப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தச் செலவு ஒரு நபரின் மீது சுமத்தப்பட்டது என்று சொல்லமுடியாது. கூட்டமைப்புக்கு அதன் ஸ்பான்ஸர்கள் மற்றும் பிற வருமான ஆதாரங்கள் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.

“இந்திய அரசு தனது ஹாக்கி அணிக்காக மூன்று கோடி ரூபாய் செலவிடுகிறது. அவர்களின் தரவரிசை ஐந்தாவது-ஆறாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், கடந்த ஐந்து மாதங்களில் பாகிஸ்தான் ஹாக்கி அணி 17-வது இடத்திலிருந்து 15-வது இடத்திற்கு வர முடிந்தது,” என்றும் பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.

பாகிஸ்தானில் புறக்கணிக்கப்படும் ஹாக்கி

இந்த விஷயத்தைப் பற்றிப் பேச முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் ஹசன் அப்பாஸை பிபிசி தொடர்பு கொண்டபோது, அவர் கடன் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் பற்றிப்பேச மறுத்துவிட்டார். ஆனால் அணியின் மன உறுதி மற்றும் திறமைக்கு என்ன ஆகும் என்று கேட்டபோது ஹசன் அப்பாஸ், ‘வெற்றியை’ ‘கடின உழைப்புடன்’ இணைத்தார்.

கடின உழைப்பால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நேர்மையாகக் கடின உழைப்பைச் செய்தால் திறமை மேம்படும், வெற்றியும் தானாக வரும் என்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய விளையாட்டாக இருக்கும்போதும் கூட இளைஞர்கள் கிரிக்கெட்டை ஒப்பிடும்போது ஹாக்கிக்கு ஏன் அதிகமாக வருவதில்லை?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஹசன் அப்பாஸ், மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பது போல் ஹாக்கியையும் ஆதரித்தால் மட்டுமே இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு வருவார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி 2024-இல் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு அவர் என்ன சொல்லவிரும்புகிறார் என்று கேட்டபோது, “கடினமாக உழையுங்கள். நாட்டுக்காக உழையுங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,” என்று அவர் சொன்னார்.

1960-இல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. இது ஹாக்கியை பாகிஸ்தானின் தேசிய விளையாட்டாக மாற்றியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய பாகிஸ்தான் அணிக்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான், கராச்சியில் விருந்தளித்தார். அப்போது அவர் ‘ஹாக்கிக்கு தேசிய விளையாட்டு அந்தஸ்து வழங்குவது’ குறித்து முறைப்படி அறிவித்தார்.

Previous Story

சாணக்கியனுக்கு 60 கோடி! அம்பலமாகும் தகவல்கள்!!

Next Story

'பெருமனதுடன் மன்னிக்கவும்'