உக்ரைன் மீது போர்: ரஷ்யாவுக்கு சவால்ள் 

உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான போரில் ஈடுபட்டால், அந்நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என, அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ஒத்துப் போவதால், உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.

உக்ரைன் மக்களோ, தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்த இணைப்பிற்கு ஆதரவளித்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் பக்கம் உக்ரைன் சாய்வது, தனக்கு ஆபத்தாகிவிடும் என, ரஷ்யா அஞ்சுகிறது. இதையடுத்து, ரஷ்ய – உக்ரைன் எல்லையில் தன் படைகளை ரஷ்யா குவித்துள்ளது. எந்நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்பதால், ஐரோப்பிய கண்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ரஷ்யாவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைப்பது, அரசுக்கு பொருளாதார வளத்தை தந்திருக்கிறது. சோவியத் கால ராணுவ பலம் அப்படியே குறையாமல் இருக்கிறது.

இவற்றை கொண்டு தானும் ஒரு வல்லரசு தான் என நிரூபிக்க ரஷ்ய அதிபர் புடின் விரும்புகிறார். ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பொதுவான எண்ணமாக, அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால், இரண்டும் இணைந்து செயல்படுகின்றன. நெருக்கடி என்றால் சீனா, ரஷ்யாவுக்கு துணையாக நிற்கும் என, அதிபர் புடின் நம்புகிறார்.

கொரோனா பரவலால், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்த, உக்ரைன் மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா முழுமையாக போர் தொடுத்தால், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும்; ஐ.நா., சபையும், பொருளாதார தடைகளை விதிக்கலாம். இந்தியா உட்பட பல நாடுகளின் நட்புறவிலும் பாதிப்பு ஏற்படும்.ரஷ்யாவிடம் மட்டு மல்ல, உக்ரைனிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. போர் ஏற்பட்டால், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், ரஷ்யாவின் இயற்கை வளம், எண்ணெய் வளம் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். ரஷ்யாவில் முன்பிருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது இல்லை.நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. போர் நடந்தால், ரஷ்யா பெரும் அழிவை சந்திக்கும் பேராபத்து உள்ளது.

அதனால், ‘இந்த விவகாரத்தில் புடின் அவசரபடமாட்டார்; ‘பூச்சாண்டி’ தான் காட்டுவார்’ என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நேரடி போரை தவிர்க்கும் வகையில், உக்ரைன் நாட்டின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களில் ‘சைபர்’ தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டமிட்டுஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அடுத்து வரும் நாட்கள், பெரும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Story

நடிகையை பிச்சை எடுக்க வைத்த தமிழ் இயக்குனர்

Next Story

நான் தான் 'வேட்பாளர்'