இஸ்ரேல் vs இரான்:  மிகப்பெரிய போர்?

சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதியை வான்வழி தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொலை செய்துள்ளது.
இஸ்ரேல் vs இரான்

ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மாதக்கணக்கில் நீளும் நிலையில் இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளன.

ஹமாஸ் தலைவர் கொலையால் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எத்தகைய சூழல் நிலவுகிறது? இஸ்ரேல் மற்றும் இரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் என்ன சொல்கின்றன? மத்திய கிழக்கு பிராந்திய நிகழ்வுகள் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன? ரஷ்யா, சீனா என்ன சொல்கின்றன? விரிவாகப் பார்க்கலாம்.

Israel strikes back at Iran: Explosions rock airbase in city linked to  Tehran's nuke program but US denies nuclear facilities were targeted after  Netanyahu launched attack in defiance of Biden | Daily

ஹமாஸ் கூறுவது என்ன?

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்குப் பிறகு அந்த அமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் இதுகுறித்து கூறுகையில், “ஹமாஸ் என்பது ஒரு சித்தாந்தம். ஒரு தலைவரைக் கொலை செய்வதால் ஹமாஸை மாற்றிவிட முடியாது. இதனால் நிச்சயம் ஹமாஸ் சரணடையவோ, இணங்கவோ செய்யாது.” என்றார்.

இஸ்மாயில் ஹனியா
கொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

‘ஹனியே சிந்திய இரத்தம் வீண் போகாது’ – இரான்

ஹனியே படுகொலைக்குப் பிறகு இரானில் இருந்து அடுத்தடுத்து கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அந்நாட்டின் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி, ‘ஹனியா ஒரு பெருமைமிக்க போராளி’ என்று கூறியுள்ளார்.

இரானின் வெளியுறவு துறை அமைச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘ஹனியாவின் இரத்தம் நிச்சயம் வீண் போகாது’ என்று அவர் கூறியுள்ளார்.

‘நிச்சயம் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த மரணம் இரான் – பாலத்தீன் இடையிலான ஆழமான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பை மேலும் வலிமையாக்கும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

ஹமாஸ் தலைவர் ஹனியேவுடன் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

இஸ்ரேலுக்கு பதிலடி – இரான் அதிபர் சபதம்

‘ஹனியேவை கோழைத்தனமாக கொலை செய்தமைக்காக இஸ்ரேல் நிச்சயம் வருத்தப்படும்’ என்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார். இரான் தனது பிராந்தியத்திற்கான ஒருமைப்பாடு, பெருமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

‘இரானிய அதிபர் ஹனியேவை ஒரு தைரியமான தலைவர்’ என்று குறிப்பிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இரானில் உச்ச அதிகாரம் பெற்ற அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி, ‘ஹனியே கொலைக்கு பழிவாங்க வேண்டியது டெஹ்ரானின் கடமை’ என்று கூறியுள்ளார்.

கத்தாரில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியே, இரான் அதிபராக பெசெஷ்கிய பதவியேற்ற விழாவில் பங்கேற்க டெஹ்ரான் சென்றிருந்த நிலையில்தான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் கூறுவது என்ன?

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மரணத்திற்கு இஸ்ரேலிடம் இருந்து இதுவரை எந்த நேரடி பதிலும் வரவில்லை.

இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ‘எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறியுளளார்.

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் தனது இடுகையில், ‘இஸ்ரேல் பாதுகாப்பு படை சூழலை மதிப்பீடு செய்து வருகிறது. ஏதேனும் மாற்றம் செய்வதென முடிவெடுத்தால் பொதுமக்களிடம் அறிவிப்போம்’ என பதிவு செய்துள்ளார்.

லெபனானுக்கு இஸ்ரேல் வேண்டுகோள்

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் ஆயுதக்குழுக்கள் நடமாட்டத்தை தடை செய்யும் ஐ.நா. தீர்மானத்தை அமல்படுத்தினால் ஹெஸ்பொலாவுடன் முழு அளவில் போர் வெடிப்பதை தடுக்க முடியும் என்று இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பான ஐ.நா.வின் 1701 தீர்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தி டஜன்கணக்கான வெளியுறவு அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் எல்லை மற்றும் லிடானி ஆறுக்கு இடைப்பட்ட 3 கிலோமீட்டர் வரையிலான இடத்தில் லெபனான் ராணுவம், ஐ.நா. அமைதிப்படையைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்கிறது அந்த ஐ.நா. தீர்மானம்.

இது 2006 ஆம் ஆண்டு ஹெஸ்பொலா – இஸ்ரேல் போரின் முடிவில் நிறைவேற்றப்பட்டதாகும்.

“முழுமையான போரில் இஸ்ரேலுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அதனை தடுக்க ஐநா தீர்மானம் – 1701ஐ அமல்படுத்துவதே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி” என்று கட்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டனி பளிங்கென்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பளிங்கென்

‘போர் நிறுத்தம் வேண்டும்’ -USA வெளியுறவு செயலாளர்

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பளிங்கென் (Antony Blinken) இதுகுறித்து பேசுகையில், ‘ நடந்த நிகழ்வு குறித்து நான் எதுவும் ஊகிக்க விரும்பவில்லை. ஆனால், போர் நிறுத்தம் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும்’ என்றார்.

ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலின் விளைவாக, காஸாவில் உள்ள குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நாளும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் எப்படி சாத்தியம்? – கத்தார்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் கத்தார், “ஹனியே மரணம் பேச்சுவார்த்தையை ஆபத்தான சூழலுக்கு இட்டுச்செல்லும். பேச்சுவார்த்தையில் ஹனியே முக்கிய பங்காற்றி வந்தார்” என தெரிவித்துள்ளது.

‘பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பின் பிரதிநிதியை மற்றொரு தரப்பு படுகொலை செய்யும் போது எப்படி பேச்சுவார்த்தை வெற்றிபெற முடியும்? என்ற கேள்வியை முன்வைக்க வேண்டி உள்ளது” என்று கத்தார் பிரதமர் கூறுகிறார் .

இஸ்மாயில் ஹனியே படுகொலையின் பின்னணியில் நாங்கள் தான் இருக்கிறோம் என இதுவரையில் இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, ஜோர்டான் கண்டனம்

‘ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேலின் செயலால் பதற்றமான சூழல் அதிகரிக்கும். பிரச்னைக்குரிய இடங்களில் குழப்பங்கள் எழ வழிவகுக்கும்’ என்று ஜோர்டான் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு துறை அமைச்சர் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த படுகொலையை உறுதியாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்

‘போர் வெடிக்காது’ – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவில் மோதல் வெடிக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘போர் என்பதை தவிர்க்க முடியாதது அல்ல என்று நினைக்கிறன். அமைதியை நிலைநாட்ட எப்போதும் அதற்கான இடமும் வாய்ப்பும் இருக்கிறது’ என்று தனது பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் ஊடகத்திடம் அவர் கூறினார்.

ஹனியே மரணம் குறித்து ஆஸ்டின் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் கூடுதலாக அளிக்க என்னிடம் எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலை அமெரிக்கா எப்படி ஆதரிக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘பதற்றமான சூழலை குறைப்பதே எங்கள் இலக்கு’ என்று ஆஸ்டின் பதில் அளித்தார்.

இஸ்ரேல் - இரான் இடையே போர் நிலவும் இடத்தின் வரைப்படம்
         மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் பிராந்தியத்தை காட்டும் வரைபடம்

இரான் எச்சரிக்கையால் என்ன நிகழும்?

இரானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கவலை என்று பிபிசி பெர்சியாவின் சிறப்பு செய்தியாளர் கஸ்ரா நஜி கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் சிரியாவில் இரானிய தூதரக கட்டிடத்தில் அந்நாட்டின் புரட்சிகர காவலர் படையைச் சேர்ந்த 6 பேரை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகள் மற்றும் டிரான்கள் கொண்டு இரான் தாக்கியது.

ஹனியே படுகொலை முன்னெப்போதும் இல்லாத நோக்கம் மற்றும் தீவிரத்தை கொண்டிருக்கிறது. ஆகவே, இப்போது இரான் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை கட்டவிழ்த்துவிடலாம்.

இஸ்ரேல் மீது தாக்குதலை முன்னெடுக்குமாறு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது ஆதரவு ஆயுதக்குழுக்களை இரான் கேட்டுக் கொள்ளலாம். இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்க ஹெஸ்பொலாவுக்கு இதுவொரு காரணமாக அமையும்.

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டலாம் எனவும், இதுவொரு முழுமையான போராக உருவாக சாத்தியங்கள் உள்ளன என்றும் கருதப்படுகிறது.

“இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் வெடிக்க வழிவகுக்குமா? என கூறுவது சற்று கடினம் தான். இச்சமயத்தில் இப்படி ஒரு சூழல் உருவாவதை யாரும் விரும்பவில்லை. ஆனால், போர்கள் எப்போதுமே அதன் மோசமான பின்விளைவுகளையும் அபாயங்களையும் பொருட்படுத்தாதவை.” என்று பிபிசி பெர்சியாவின் சிறப்பு செய்தியாளர் கஸ்ரா நஜி கூறுகிறார்.

Previous Story

செல்வாக்கான முஸ்லிம் அரசியல் தலைமைகள் பற்றிய ஒரு ஆய்வு 2024

Next Story

சஜித் -ஹக்கீம் இரகசிய உடன்படிக்கை முடிந்தது