இந்தியாவில்தான் கொரோனா அதிகம்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே

ஜெனீவா: தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பது இந்தியாவில்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 150 சதவிகிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றையடுத்து, டெல்டா என்ற வேரியண்ட் பரவியது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகியது. அதையடுத்து ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸின் வகை உலகமெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியா

உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த வாரம், 15 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. இதுவே கடந்த வாரம் 6 லட்சமாக இருந்தது. தற்போது இது பலமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்றைவிட 8.2 சதவிகிதம் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. தொற்றை இன்னும் குறைக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.

மொராக்கோ

அதேபோல், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் மொராக்கோ நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. கடந்த வாரம் 4610 ஆக இருந்த பாதிப்பு தற்போது 31,701 ஆக அதிகரித்துள்ளது. இது 45 சதவிகித அதிகரிப்பாகும். அதேபோல் லெபனானில் 19 சதவிகிதமும், டுனிசியாவில் 194% கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஒமிக்ரான்

அதேபோல், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒமிக்ரான் வைரஸ் 171 நாடுகளில் பரவி இருக்கிறது. ஒமிக்ரானால் இறப்பு விகிதம் குறைவு என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒமிக்ரானின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் டெல்டா வகை வைரஸ்களைவிட கடுமையான பாதிப்புகள் இந்த ஒமிக்ரானால் ஏற்படவில்லை. ஆனால் இந்த தொற்றால் அதிகமானோர் சீக்கிரத்தில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஸ்டெல்த் ஒமிக்ரான்

ஒமிக்ரான் வைரஸில் இருந்து புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதை ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’ என்று அழைக்கின்றனர். நாற்பது நாடுகளுக்கு மேல் இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த “ஸ்டெல்த் ஓமிக்ரான்” தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Story

மூழ்கும் நிலையிலிருந்த இலங்கையை தக்க நேரத்தில் மீட்டெடுத்த இந்தியா!

Next Story

ஐ.நா.விற்கு செல்லத் தயாராகும் பேராயர்! கலக்கத்தில் கோட்டாபய!!